* 27ம் தேதி விற்பனை அதிகரிக்கும், பாப்கார்ன் கப்புள் டிரஸ் டிரெண்டிங்
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். நமது வாழ்வில் ஆடைகள் இன்றிமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு மனிதனின் அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். மனிதனின் தேவையில் 2வதாக இருப்பது ஆடைகள்தான். இப்படிப்பட்ட ஆடைகளை தயாரித்து திருப்பூர் மாவட்டம் இன்று உலக அரங்கில் தனக்கென்று தனி முத்திரையை பதித்துள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழில் ஒன்றிய, மாநில அரசுக்கு அதிக வருவாயை ஈட்டிக்கொடுத்து வருகிறது.
இது மட்டுமின்றி இந்த தொழில் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். அந்த தொழிலாளர்களின் குடும்பமும் வாழ்வாதாரம் பெற்று வருகிறது. திருப்பூரில் ஆண்டு முழுவதும் ஆடை தயாரிப்பு நடைபெற்று வருகிறது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகிற ஆர்டர்களின்படி ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் ஆடைகளை தயாரித்து அனுப்பி வருகிறார்கள்.
இவ்வாறாக ஆண்டு முழுவதும் இந்த ஆடை வர்த்தகம் நடைபெறும். என்றாலும் தீபாவளி, திருப்பூர் உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் அதிகளவில் எதிர்பார்க்கும் பண்டிகை. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும். இதனால் உற்சாகமாக ஆடைகளை தயாரித்து அனுப்புவார்கள். திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகளிலும் ஆடை விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
கடந்த 2 ஆண்டுகளாக நூல் விலை உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் தீபாவளி பண்டிகை ஆடை விற்பனை மற்றும் ஆர்டர்களில் தொய்வு ஏற்பட்டது. எதிர்பார்த்த ஆடைகள் விற்பனையும் இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி கடந்த 2 மாதங்களாகவே மும்பை, கொல்கத்தா, கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஆர்டர்களின்படி ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களிலும் ஆடை தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காதர்பேட்டையிலும் ஆடை விற்பனை களை கட்டி வருகிறது. இதுகுறித்து திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் யுவதேவராஜ் கூறியதாவது: திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் வாயிலாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆடைகளை அனுப்பி வருகிறோம்.
தீபாவளி பண்டிகைதான் உள்நாட்டு ஆடை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த 2 ஆண்டுகளாக நூல் விலை உயர்வு மற்றும் வங்கதேச ஆடைகள் மற்றும் துணிகள் வரத்து உள்ளிட்ட பாதிப்புகளின் காரணமாக ஆடை விற்பனை சரிவை சந்தித்தது. சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மட்டுமே தீபாவளி விற்பனை நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு எங்களுக்கு தித்திக்கும் தீபாவளியாகத்தான் இருக்கிறது. கடந்த 2 மாதமாகவே பல மாநிலங்களில் இருந்து வந்த ஆர்டர்களை அனுப்பி வைத்து வருகிறோம்.
இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கு தீபாவளி ஆடைகள் விற்பனை என்ற இலக்கு நிர்ணயித்திருந்தோம். தற்போது ஆர்டர்கள் மற்றும் ஆடை விற்பனைகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் ரூ.6 ஆயிரம் கோடியையும் உள்நாட்டு ஆடை வர்த்தகம் தாண்டும் நிலை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஆடை உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தனர். கடன் சுமை பலரையும் வாட்டி வதைத்தது. இருப்பினும் பலருக்கு வாழ்வு அளிக்கும் இந்த தொழிலை நம்பி ஆடை தயாரிப்பில் ஈடுபட்டோம்.
தற்போதைய தீபாவளி வர்த்தகம் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். காதர்பேட்டையில் கடை வைத்திருக்கும் வியாபாரி யோகநாதன் கூறுகையில், ‘நான் காதர்பேட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக கடை வைத்து வியாபாரம் செய்கிறேன். ஜிஎஸ்டி வந்த பின்னர் இருந்தே ஆடை விற்பனை பாதிப்பைதான் சந்தித்து வந்தது. ஜிஎஸ்டி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே வர்த்தகம் செய்யும் வகையில் நடைமுறை வந்துவிட்டது. ஆனால், கடந்த காலங்களில் ஆடைகளை வாங்கி சென்று வீடுகளில் வைத்து விற்பனை செய்யும் பல வியாபாரிகள் திருப்பூருக்கு வந்து ஆடைகளை வாங்கி சென்றார்கள்.
தற்போது அந்த வியாபாரிகள் வருவதில்லை. இதுபோல் நூல் விலை உயர்வு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக இருந்தது. தற்போது நிலையாக நூல் விலை இருக்கிறது. இதுபோல் வாங்கும் திறன் மக்களிடம் அதிகமாக உள்ளதால் பலர் தீபாவளி பண்டிகைக்கான ஆடைகளை வாங்கி செல்வதால் விற்பனை இந்த ஆண்டு நன்றாக உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது காதர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடை வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு ரூ.5 கோடி வரை நடைபெறும் வாய்ப்புள்ளது’ என்றார்.
* கை கொடுத்த மாற்றம்
திருப்பூர் ஆடை தயாரிப்பாளர்கள் பெரும்பாலானவர்கள் காட்டன் துணிகளால் ஆன டி சர்ட்டுகள் உள்ளிட்ட ஆடைகளையே தயாரித்து வருகின்றனர். ஒரே மாதிரியான ஆடைகள் என்பதால் இது வெளிமாநில வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே வாங்கும் திறனை குறைத்தது. இதனால் ஆடை உற்பத்தியாளர்கள் தீபாவளிக்காக ஆடை தயாரிப்பை மாற்றினர். அதன்படி பாலியஸ்டர் மற்றும் செயற்கை நூலிழையான ஆடைகளை தயாரித்தனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் விரும்பி இந்த ஆடைகளை வாங்க தொடங்கியுள்ளனர். இதனால் கூடுதலாக ஆடைகள் விற்பனையாகி வருகின்றன.
* தீபாவளி ஜவுளி விற்பனையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ரக ஆடைகள் பிரபலமடைவது (‘டிரெண்டிங்’) வழக்கம். அந்த வரிசையில் இந்த ஆண்டு ‘பாப்கார்ன்’, ‘டிஸ்யூ’ ரக ஆடைகள் ‘டிரெண்டிங்’ ஆகி உள்ளது. இந்த ‘பாப்கார்ன்’ ரகம் என்பது ஒருவித துணியின் பெயர். இந்த துணியில் ஆண்களுக்கான சட்டைகளும், பெண்களுக்கான குர்தி ஆடைகளும் சந்தைக்கு வந்துள்ளன. சட்டைகளில் பிரிண்டட், பிளேன், நேர் டிசைன் ஆகிய ரகங்கள் உள்ளன.
இதில், அதிக ‘டிரெண்டிங்’ ஆகியிருப்பது ‘கப்புள் டிரஸ்’ எனப்படும் இணை ஆடைகள்தான். அதாவது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே துணியில், ஒரே டிசைனில் ஆடைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘கப்புள் டிரஸ்’களை தம்பதிகளும், காதலர்களும் அதிகமாக விரும்பி வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு ஜவுளி சந்தைகளில் தற்போது ‘டிஸ்யூ’ ஆடைகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘டிஸ்யூ’ ரகத்தில் குழந்தைகளுக்கு எண்ணற்ற டிசைன்களில் ஆடைகள் உள்ளன.
இந்த ஆண்டு ‘டிஸ்யூ’ ரகத்தில் சுடிதார், குர்தி, குழந்தைகள் ஆடைகள் போன்றவை ‘டிரெண்டிங்’ விற்பனையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு ‘டிரெண்டிங்’ விற்பனையில் ‘பாப்கார்ன்’, ‘டிஸ்யூ’ ரக ஆடைகளை இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
‘பாப்கார்ன்’ ரக ஆண்களுக்கான சட்டைகள் ரூ.300 முதல் ரூ.400 வரையும், சுடிதார் ரகங்கள் ரூ.600 முதல் ரூ.850 வரையும், குர்தி ரகம் ரூ.150 முதல் ரூ.600 வரையும், ‘டிஸ்யூ’ ரகங்கள் குழந்தைகளுக்கு ரூ.250 முதல் ரூ.700 வரையும், பெண்களுக்கு சேலைகள் ரூ.600 முதல் ரூ.800 வரையும், ‘கப்புள்’ ஆடைகள் ரூ.1,500 முதல் ரூ.4,500 வரை என்ற விலைகளில் விற்பனையாகிறது. இந்த ரக ஆடைகள் அகமதாபாத், புதுடெல்லி, சூரத், பாலி ஆகிய பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன.
* திருப்பூரில் உள்ள ஒரு சில பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நிறுவனங்களில் வருகிற 26ம் தேதி சம்பளத்துடன் போனஸ் வழங்கப்படும். இதனால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடை விற்பனை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த விற்பனையை எதிர்பார்த்து காதர்பேட்டை வியாபாரிகள் பலர் காத்துள்ளனர்.
The post தயாரிப்பாளர்களுக்கு தித்திக்கும் தீபாவளி உள்நாட்டு ஆடை வர்த்தகம் ரூ.6,000 கோடியை எட்டியது: களை கட்டியது காதர்பேட்டை appeared first on Dinakaran.