தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இடைநீக்கம்: திருமாவளவன் கண்டனம்

2 months ago 11

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

"தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ( டிசம்பர்12), திடீரென அவரைப் பணியிடை நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2017 - 2018ம் ஆண்டில் நடந்த நாற்பது பேருக்கான பேராசிரியர் பணிநியமனங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றாலும், அவர்களின் "தகுதிகாண் பருவம்" நிறைவடைந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் (சிண்டிகேட்) ஒப்புதலுடன் அவர்களுக்கான பணிநிரந்தர ஆணையை வழங்கியுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்னும் நிபந்தனையுடன்தான் இந்த ஆணையை அவர் வழங்கியுள்ளார். இந்த பணிநிரந்தர நடவடிக்கைக்கு எதிராகவே கவர்னர் துணைவேந்தரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறார். பணிநியமனத்துற்கும் தற்போதைய துணைவேந்தருக்கும் தொடர்பில்லை. தகுதிகாண் பருவம் நிறைவடைந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் முழுமையான ஒப்புதலுடன்தான் பணிநிரந்தரம் செய்துள்ளார். அதுவும் நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது அதற்கேறப பணிநிரந்தர ஆணை மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்கிற நிபந்தனையுடன்தான் அவ்வாணையை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதலைப் பெறாத ஒரு விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு கவர்னர் கோரிய விளக்கம் அளிக்கவில்லை என்று அவர்மீது குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கவர்னர் அவர்களின் இந்த நடவடிக்கை திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் நடவடிக்கையே ஆகும்.

திராவிட அரசியலுக்கும் திமுக அரசுக்கும் ஆதரவாகவே துணைவேந்தர் செயல்படுகிறார் என அவருக்கு எதிரான சக்திகள் தொடர்ந்து கோள்மூட்டியதையடுத்து, கவர்னர் அவர்கள் ஆத்திரம் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். எனவே, இத்தகைய பழிவாங்கும் போக்கை கைவிட்டு, துணைவேந்தர் மீதான நடவடிக்கையை அவர் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்."

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Read Entire Article