சென்னை: மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 2152 கோடி ரூபாயை தராமல் முரண்டு பிடிக்கிறது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேர வேண்டிய அந்த நிதியை தங்களுடைய அற்ப அரசியலுக்காக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய, ‘தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை’ நூலினை வெளியிட்டு பேசியதாவது: இது புத்தக வெளியீட்டு விழாவா இல்லை உரிமைக் குரல் எழுப்பும் கூட்டமா என்று கேட்க தோன்றும் அளவிற்கு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் கோபாலா கவுடா ஆற்றிய உரையாக இருந்தாலும் சரி, முன்னாள் முதல்வர் திக்விஜய சிங் உரையாக இருந்தாலும், முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை இருந்தாலும் மிகச் சிறப்பாக உரையாற்றிருக்கிறார்கள்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், பள்ளிக்கல்வித் துறை அடைந்திருக்கின்ற உயரங்களை பார்க்கிறேன். இதுவரையில் யாரும் செய்யாத 234 தொகுதிகளிலும் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்த ஒரே அமைச்சர் தம்பி அன்பில் மகேஸ். ஆண்டுதோறும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம், அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகரிப்பு இடைநிற்றல் இருக்கக் கூடாது என்று மாணவர்களை திரும்ப கல்விச் சாலைகளை நோக்கி அவர் அழைத்துக் கொண்டு வருவது. பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமாக திராவிட மாடலை மாற்றியிருக்கிறார். இந்த சாதனைகளை எடுத்து சொல்வதோடு மட்டுமல்லாமல், ஒன்றிய பா.ஜ.க. அரசால், தமிழ்நாடு எதிர் கொண்டிருக்கின்ற நெருக்கடிகளையும், நம்முடைய அரசியல் ரீதியாக அவர்கள் பழிவாங்கிக் கொண்டு இருப்பதை எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் துணிச்சலோடு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். ‘தேசியக் கல்விக் கொள்கை 2020 எனும் மத யானை’ – புத்தகத்தின் தலைப்பே மொத்த கருத்தையும் சொல்லிவிடுகிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரைக்கும், எல்லாவற்றையும் காவிமயமாக்க வேண்டும், முதலில் கல்வியை காவிமயமாக்க வேண்டும், அதற்காக கொண்டு வந்ததுதான் இந்த தேசியக் கல்விக் கொள்கை. அதனால்தான், அன்பில் மகேஸ், இந்தப் புத்தகத்தின் மூலமாக “மதவாதம் உருவாக்கும் அழிவுப் பாதையில் நாம் செல்லப் போகிறோமா? நம் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்கும் சமூகநீதிப் பாதையை நோக்கிச் செல்லப் போகிறோமா?” என்ற மிக முக்கியமான கேள்வியை இந்த நாட்டை நோக்கி அவர் எழுப்பியிருக்கிறார். அறிவு தான் நம்முடைய ஆயுதம், இன்றைக்கு, கல்விக்குத் தடை போடும் ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிராக திராவிட மாடல் அரசு போர்வாளை சுழற்றிக் கொண்டிருக்கிறது. 75 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டைச் சிதைத்து, சமஸ்கிருத பண்பாடு கொண்ட ஒற்றை தேசியத்தை கட்டமைப்பதுதான் அவர்களுடைய ஒரே நோக்கம்.
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தையும் அழிக்கும் முயற்சி இது இதை தடுக்க ஒரே வழி, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான். அதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவில்லை என்றால், கல்வி என்பது அனைவருக்கும் எட்டாக் கனியாக மாறிவிடும் தடுப்புச் சுவரை எழுப்பி எழுப்பி, பலரையும் பாதித் தூரத்திலேயே தடுத்து, கல்விச் சாலைக்கு வெளியே நிறுத்தி விடுவார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய இரண்டாயிரத்து 152 கோடி ரூபாயை தராமல் முரண்டு பிடிப்பதை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். இங்கே இருக்கின்ற திக் விஜய சிங் உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவே பரிந்துரைத்திருக்கிற நிதிதான் அது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேர வேண்டிய அந்த நிதியை தங்களுடைய Petty Politics ற்காக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது.
இதற்கு எதிராக, நிச்சயமாக, உறுதியாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத்தான் போகிறது. எப்படி, நாட்டிற்கே வழிகாட்டும் தீர்ப்புகளைப் பெற்று, இன்றைக்கு இந்திய நாட்டின், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்து இருக்கிறோமோ, அதேபோல, இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர், நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுத் தலைவர் திக்விஜய சிங், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தோழமைக் கட்சிகளின் தலைவர்களான வைகோ, செல்வப்பெருந்தகை, முத்தரசன், ஜவஹிருல்லா, வேல்முருகன், ஈஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2152 கோடியை தராமல் முரண்டு பிடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.