சென்னை: கல்வி தான் மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்து விளங்க வழி வகை செய்கிறது. அந்த வகையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் ஒன்றிய அரசு மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி ஒதுக்குவது வழக்கம். ‘சமக்ரசிக்ஷா அபியான்’ திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ஒன்றிய-மாநில அரசுகள் 60:40% அடிப்படையில் நிதியை ஒதுக்கப்படும்.
இந்நிதியில், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கு கல்வி உதவி, கல்வியில் சமத்துவம் மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கல்வி சார்ந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நிதியைப் பெற மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கெடு வைத்தது. இந்த நிதியை பெறுவதற்கு ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தது.
அதாவது ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைய வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது. மும்மொழி கல்விக்கொள்கையை புகுத்தும் இந்த திட்டத்தை இதுவரை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதன் காரணமாக பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய வகையில் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து மாநில அரசே ஊதியம் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய ரூ.2,152 கோடியை குஜராத், உத்தரபிரதேசம் போன்ற பிற மாநிலங்களுக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு 2016-17ம் ஆண்டு ரூ.2, 656 கோடி வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசு 60% நிதியாக ரூ.1,593 கோடியையும், மாநில அரசு 40 சதவீதம் நிதியாக ரூ.1,063 கோடியையும் ஒதுக்கியது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதற்கான நிதி கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வந்தது. 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசு தன் பங்காக ரூ.2, 152 கோடியும், மாநில அரசு ரூ.1,434 கோடியையும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய அரசு தன்னுடைய பங்கு நிதியை 4 தவணைகளாக பிரித்து வழங்குகிறது.
இந்த ஆண்டுக்கான முதல் தவணைத் தொகை வழங்குவதற்கு முன்னதாக ‘பி.எம்.ஸ்ரீ’ பள்ளித்திட்டத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இணைய ஒன்றிய அரசு வற்புறுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமான பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்டத்தையும் ஏற்க மறுத்துவிட்டது. அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போடவில்லை.
இதனால், ஒன்றிய அரசு தன் பங்கு நிதியான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தராமல் நிறுத்தியது. பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைய கையெழுத்து போட்டுவிட்டு நிதியை பெற்றுக்கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நிதியை வழங்கிட வலியுறுத்தினார். ஆனாலும் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்க இல்லை, மாநில அரசின் வலியுறுத்தலுக்கு செவிசாய்க்கவும் இல்லை.
இதற்கிடையில், 2024-25ம் கல்வியாண்டில் தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக ஒதுக்கிய ரூ.2,152 கோடியை, கல்வியாண்டு நிறைவடைய உள்ளதால், அந்த நிதியை உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கல்வியாளர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியுலும், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட போதிலும், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, மாநில அரசு அவ்வப்போது தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.
* இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி விவரம் (கோடியில்)
நிதி ஆண்டு மொத்த மதிப்பீடு ஒன்றிய அரசு நிதி (60%) மாநில அரசு நிதி (40% )
2016-17 2,656 1,593 1,063
2017-18 2,778 1,666 1,112
2018-19 2,837 1,701 1,136
2019-20 3,275 1,965 1,310
2020-21 3,186 1,911 1,275
2021-22 3,055 1,833 1,222
2022-23 3,444 2,066 1,378
2023-24 3535 2,121 1,414
2024-25 3,586 2,152 1,434
The post தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குஜராத், உ.பி.க்கு பிரித்து கொடுத்த ஒன்றிய அரசு: வலுக்கும் கண்டனங்கள் appeared first on Dinakaran.