தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை அரசும், மக்களும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

1 month ago 5

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தமிழக அரசும், மக்களும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2024 மாநில அளவிலான ஜூடோ கல்லூரி மாணவியர் 52 கிலோ எடை பிரிவு போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர், வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, நேரு உள்விளையாட்டரங்கில் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் உணவு வழங்கும் கூடத்தை பார்வையிட்டு, உணவின் தரம் குறித்தும், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்தும் கேட்டறிந்து வீரர் வீராங்கனைகளுடன் உணவு அருந்தினார்.

பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: கனமழையை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது. கடந்த 3 மாதங் களாக தொடர்ந்து கிட்டத்தட்ட 5 ஆய்வு கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். நீர்வளத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், அனைத்து மூத்த அமைச்சர்கள், சென்னையில் இருக்கக்கூடிய அமைச்சர்கள், சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், சில மாமன்ற உறுப்பினர்களை வைத்து தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். சட்டமன்ற உறுப்பினர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கால தாமதமின்றி நிறைவேற்ற சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு முதல்வர் தலைமையில் ஒரு ஆய்வு கூட்டம் நடந்தது.

நேற்று காலை மீண்டும் முதல்வர், தலைமை செயலாளர், மூத்த அதிகாரிகள் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த முறை கண்டிப்பாக மழையை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் எதிர்கொள்வோம். வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்று நம்பிக்கை உள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கடந்த 10 நாட்களாக இங்கேதான் தங்கி இருக்கிறார்கள். மழை வந்தாலும் தங்கும் வசதிகள், போக்குவரத்து வசதிகள், உணவு வசதிகள் அனைத்தும் தரமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி மழை வந்து ஓரிரு நாட்கள் போட்டிகள் நீடித்தாலும் அதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை அரசும், மக்களும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article