தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க மாநில அளவிலான சிறப்பு பணிக்குழு அமைப்பு

3 months ago 34

சென்னை,

தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு மாநில அளவிலான சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க தமிழக அரசு மாநில அளவிலான சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது. ஏற்கனவே, 2014-2015-ம் ஆண்டிலேயே மகப்பேறு இறப்பு விகிதம் 70 என்ற நிலையான வளர்ச்சி இலக்கை மாநிலம் எட்டியுள்ளது.

எனினும், 2023-2024 மாதிரி பதிவு அமைப்பு (எஸ்ஆர்எஸ்) தரவுகளின்படி, மகப்பேறு இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 45.5 ஆக இருப்பதை அடுத்த 2 ஆண்டுகளில் 10-க்கும் குறைவாகக் குறைக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அரசு முடிவு செய்து, மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைவராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பிற உறுப்பினர்களுடன் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் உறுப்பினர்-செயலாளராக செயல்பட்டு மகப்பேறு இறப்புகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் வகையில், பிரசவத்திற்கு முந்தைய திட்டமிடல், திறன் மேம்பாடு, அத்தியாவசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ உதவிகள் போன்றவற்றின் மூலம் செயல்படுத்த, மாநில அளவிலான சிறப்பு பணிக் குழுவை அரசு அமைத்துள்ளது.

அவ்வாறே, மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக் கொண்டு, மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு, இதர உறுப்பினர்களுடன் செயல்பட்டு, ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கான விரிவான பிறப்பு திட்டமிடலை செயல்படுத்தும். இந்த முயற்சியினை வலுவாக்க வல்லுநர்கள் / நிபுணத்துவ நிறுவனங்களை இணைத்துக் கொள்ளவும் மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article