சென்னை: தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இறுதி தேர்வு முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. வெயில் ஒருபுறம் இருந்தாலும், ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் கோடை விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் திரும்பிவர வேண்டும் என்பதால் முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என்றும், வரும் ஜூன் 2ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்த நிலையில் திட்டமிட்டபடி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். இதனிடையே தமிழ்நாடு அரசு பாடநூல்கழகத்தின் மூலம் சென்னை, ஒடிசா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அச்சடிக்கப்பட்ட இலவச பாடப்புத்தகங்கள் தமிழக மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
The post தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்ததால், திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.