![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38301345-untitled-5.webp)
சென்னை,
தமிழ்நாட்டில் 2024-2025 நெல் கொள்முதல் பருவத்தில் இதுவரை 11.98 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட 3.5 லட்சம் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர், ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஶ்ரீரங்கம் வட்டம், பூங்குடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டார்.
அப்போது கொள்முதல் நிலையப்பணியாளரிடமும், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடமும் விவசாயிகளைக் காத்திருக்க வைக்காமல் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லினைப் புகாருக்கு இடமின்றி கொள்முதல் செய்திடவும், நெல்லுக்குண்டான தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் உடன் வரவு வைக்கவேண்டும் எனவும், கொள்முதல் செய்யப்படும் நெல்லினைக் காலதாமதமின்றி அரவை ஆலைகளுக்கு அனுப்பிட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும் அவர், "பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003-ம் கொள்முதல் பருவத்திலிருந்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் அக்டோபர் 1-ம்தேதி முதல் தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, விவசாயிகளின் நலன் கருதி கடந்த 3 ஆண்டுகளாக 1 மாதம் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் 1-ம்தேதி முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி, அவ்வப்போது தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையை உயர்த்துவதன் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நெல் வரத்து அதிகமாக உள்ளது.
01.09.2024 முதல் 07.02.2025 வரை தமிழ்நாடு முழுவதும் 2,560 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதின் மூலம், 1,66,511 விவசாயிகளிடமிருந்து 11,98,043 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையாக ரூ.2,603.14 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது.
நடப்பு கே.எம்.எஸ் 2024-2025-ம் பருவத்தில் 07.02.2025 வரை 11,98,043 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த கே.எம்.எஸ் 2023-2024-ம் பருவத்தில் 07.02.2024 வரை கொள்முதல் செய்யப்பட்ட 8,47,692 டன் நெல்லின் அளவோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு, 3,50,321 டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.