தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

3 months ago 40

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் சென்னை, திருச்சி, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயணித்த பயணிகளை விட 2024 ஆகஸ்ட் மாதம் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,53,115 பயணிகள் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 17,53,115 பயணிகள் மட்டுமே பயணித்து உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 90,222 அதிகரித்துள்ளது. இது 5.1% ஆகும். இதேபோல் கோவை விமான நிலையத்தில், பயணிகள் எண்ணிக்கை 16,199 அதிகரித்துள்ளது. இது 6.4% ஆகும்.

திருச்சி விமான நிலையத்தில் 17.9%, தூத்துக்குடி விமான நிலையத்தில் 16.4% பயணிகள் அதிகரித்துள்ளனர்., சேலம் விமான நிலையத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10,994 பயணிகள் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலம் விமான நிலையம் செயல்படவில்லை. மேலும், தமிழ்நாட்டில் விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், சென்னை விமான நிலையத்தில், சர்வதேச முனையத்தில் மட்டும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது விமான நிலைய அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சர்வதேச முனையத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4,86,177 பயணிகள் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 4,94,796 பயணிகள் பயணித்துள்ளனர். எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8,619 பயணிகள் குறைவு. இது மைனஸ் 1.8% ஆகும்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘சென்னை சர்வதேச விமான நிலையத்தில், சுங்கத்துறையினரின் கெடுபிடிகள் அளவுக்கு அதிகமாக உள்ளது. சுங்கச் சோதனை என்ற பெயரில் பயணிகளை பல மணி நேரம் விமான நிலையத்தில் காக்க வைப்பதோடு, பெண் பயணிகள் சிறிதளவு தங்க நகைகள் போட்டுக் கொண்டு வந்தாலும், அது பழைய நகைகளாக இருந்தாலும், உடனே அவற்றை பறிமுதல் செய்வது, சுங்க தீர்வை பெருமளவு போடுவது போன்றவை நடப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பலர், சென்னை விமான நிலையத்திற்கு வராமல், அருகே உள்ள பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களுக்கு சென்று விட்டு, அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை, ரயில்களில் வந்து விடுகின்றனர்’’ என்று கூறுகின்றனர்.

The post தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article