சென்னை: தமிழ்நாட்டில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசிதழில் வெளியீடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை வரலாறு, சுற்றுலா வணிகம் போன்றவற்றை கருத்தில் கொண்டும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பகுதி மக்களின் கருத்துகளை பரிசீலனை செய்து நகராட்சியாக தரம் உயர்த்தி அரசிதழ் வெளியிடப்பட்டது. பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.
கடந்த 2023-24ம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளில் நகராட்சிகளாக தரம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதால், அதன்படியும், பிற காரணங்கள் அடிப்படையிலும், இந்த 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம் வணிகம் போன்ற தொழில் பெருக்கத்தை கருத்தில் கொண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடப்படுகிறது.
இதையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 12-ம்தேதி இதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
The post தமிழ்நாட்டில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.