தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 28 கோடியாக அதிகரிப்பு: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

4 weeks ago 5

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு 43,283க்கும் மேற்பட்ட பழமையான கோயில்களைக் கொண்டிருக்கிறது. 1,076 கி.மீ. நீளமுள்ள நீண்ட கடற்கரை, 18 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 5 புலிகள் காப்பகங்கள், யுனஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 6 தலங்கள் உள்ளிட்ட உலகோரை கவரக்கூடிய பல்வேறு சுற்றுலாத்தளங்களைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்போடு விளங்குகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்களிப்பை 12 சதவீதமாக உயர்த்துதல், தமிழகத்தில் சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்துள்ள தொழில்களில் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனும் குறிக்கோளுடன் சுற்றுலாக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் மூலம் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துதல், சுற்றுலா வளர்ச்சி மாநாடுகளை நடத்துதல் – பங்கேற்றல், முதலீடுகளை ஈர்த்தல், கலைத் திருவிழாக்களை நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் கவனம் மிக்க செயல்பாடுகளால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை புத்துயிர்பெற்று வருகிறது. 2020ம் ஆண்டு 14.18 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 2023 ஆண்டில் 28.71 கோடியாக உயர்த்தி திராவிட மாடல் அரசு சாதனைப் படைத்திருக்கிறது. மேலும் பலகோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு சுற்றுலா துறை பல்வேறு பன்னாட்டு, தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை
* 2020ம் ஆண்டு 14.18 கோடி
* 2023ம் ஆண்டு 28.71 கோடி

The post தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 28 கோடியாக அதிகரிப்பு: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article