சென்னை: “தனிப்பட்ட ஸ்டாலினையோ, திமுக அரசையோ நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தனித்துவத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் துணையோடு தமிழ்நாட்டை நிச்சயம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் உடனான சந்திப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 6) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது: “2021-ல், தமிழ்நாட்டில் மக்களுடைய நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்று, ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைந்தது. மே 7-ம் நாள் நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டேன். நாளை மே-7 திராவிட மாடல் அரசு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது.