திருவள்ளூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தூரத்தில் நடந்து செல்லும் தொலைவில் இருக்கிறது காக்களூர் கிராமம். இந்தக் காக்களூரில் இருந்து மேலும் ஒரு கிலோ மீட்டர் விவசாய நிலங்கள் வழியாக நடந்து சென்றால் முனுசாமியின் கீரை வயலை அடையலாம். 4 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்த வயலில் 10 வகையான கீரைகள் பயிர் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் தினமும் ஏதாவதொரு வியாபாரிக்காக கீரை அறுவடை நடந்த வண்ணம் இருக்கிறது. தனது குடும்பத்தினரை மட்டுமே வைத்து தினமும் கீரை அறுவடை செய்து தினசரி வருமானத்தை பார்த்துவரும் முனுசாமியை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். கீரை அறுவடைப் பணியின் இடையே நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.
“எங்களூரில் நிறைய குடும்பங்கள் இருந்தாலும் குறைவான குடும்பங்களே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் எங்கள் குடும்பமும் ஒன்று. எங்கள் தாத்தா காலத்தில் நெல், எள், வேர்க்கடலை என பல பயிர்களை சாகுபடி செய்தார்கள். எனக்கு 10 வயது இருக்கும்போதே தாத்தாவோடும் அப்பாவோடும் வயலுக்கு சென்றேன். அதனால் பள்ளிக்குச் செல்லவில்லை. பாரம்பரியமாக விவசாயத் தொழில் செய்து வந்து குடும்பத்தில் பிறந்ததால் நானும் விவசாயத்தையே தொடர்ந்தேன். அப்பா காலத்தில் அண்ணன், தம்பி என அனைவரும் இணைந்து விவசாயம் பார்த்தோம். ஒரு கட்டத்தில் அவரவருக்கு தனித்தனியாக நிலம் பிரித்துக் கொடுத்தார்கள். அதிலிருந்து தனித்தனியாக விவசாயத்தைக் கவனித்து வருகிறோம்.
எனக்குச் சொந்தமாக 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதோடு 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மொத்தம் 4 ஏக்கரில் கடந்த 20 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளில் எனது நிலத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருக்கிறேன். தற்போது எனது மொத்த நிலத்திலும் கீரை சாகுபடிதான். 4 ஏக்கரில் மொத்தம் 10 வகையான கீரை சாகுபடி செய்து வருகிறேன். வல்லாரைக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, சிவப்பு பொன்னாங்கன்னி, பச்சை பொன்னாங்கன்னி, வெள்ளை மற்றும் சிவப்பு காசினிக்கீரை, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை என பல வகையான கீரைகளை சாகுபடி செய்கிறேன். கீரை சாகுபடிக்கு முதன்மையானது நல்ல உதிரியான மண் கொண்ட நிலம்தான். அதனால், கீரை விதைப்பிற்கு முன்னால் நிலத்தை எந்தளவு ஆழமாக உழ வேண்டுமோ அவ்வளவு ஆழமாக உழுது விடுவேன். கடைசி உழவில் தொழு உரத்தைப் போட்டு நிலத்திற்கு தேவையான அடி உரத்தையும் கொடுப்பேன். மழைக் காலங்களைத் தவிர மற்ற எல்லா காலத்திலும் கீரை சாகுபடி நன்றாக இருக்கும் என்பதால் எனது நிலத்தில் எப்போதும் கீரை சாகுபடி நடந்தபடி இருக்கும். தற்போதும் அப்படிதான். நிலமெங்கும் கீரைகளே நிறைந்திருக்கின்றன.
எங்கள் ஊர் மண்ணுக்கு நாற்று முறை கீரை சாகுபடிதான் சிறந்தது. அதனால், நேர் மற்றும் குறுக்காக அரை அடி இடைவெளியில் ஒரு குழிக்கு 3 நாற்றுகள் வீதம் நடுவோம். ஒவ்வொரு கீரைக்கும் அதன் வளர்ச்சி மற்றும் அறுவடைக் காலங்கள் மாறிக்கொண்டே இருக்கும். சில வகைக் கீரைகள் நட்டு 3 நாட்களியே வளரத் தொடங்கி 45வது நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். சில கீரைகள் வளரவே 10 நாள் ஆகும். அதேபோல், ஒருமுறை மட்டுமே அறுவடை தருகிற கீரையும் இருக்கிறது. நான்கு, ஐந்து முறை அறுவடை தருகிற கீரையும் இருக்கிறது. வல்லாரைக் கீரையெல்லாம் ஆயுள் முழுவதுமே அறுவடை தரும். ஆனால், அந்தக் கீரைக்கு பக்குவம் அதிகம். கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நல்ல பராமரிப்பு மற்றும் நல்ல உரம் கொடுத்தால் ஆண்டு முழுவதும் அறுவடை எடுக்கலாம்.
எனது நிலத்தில் தினமும் கீரை அறுவடை நடக்கும். எங்கள் நிலத்திற்கே வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். நேற்று கூட ஒவ்வொரு ரக கீரையிலுமே 100 கட்டுகள் வீதம் விற்பனை ஆனது. சில சமயம் குறைவாகவும் விற்பனை ஆகும். கீரையை சுழற்சி முறையில் அறுவடை செய்து வருவதால் மாற்றி மாற்றி வெவ்வேறு இடங்களில் கீரையை அறுவடை செய்து நிலத்திலையே விற்பனையும் செய்து விடுகிறோம். விவசாயத்தில் காத்திருந்தும் வருமானம் பார்க்கலாம். இப்படி தினசரி வருமானமும் பார்க்கலாம். எனக்கு இந்த வகை தினசரி வருமானம்தான் சரியாக இருக்கிறது. தினமும் பாடு படுகிறோம். அன்றே வருமானமும் பார்ப்பதுதான் தினசரி வாழ்விற்கு மகிழ்வானதாக இருக்கும். எனக்கு மகிழ்வாகத்தான் இருக்கிறது’’ என பூரிப்புடன் பேசுகிறார்.
தொடர்புக்கு:
முனுசாமி: 99521 05003.
தினமும் சராசரியாக 400 கட்டு கீரைகள் விற்பனை ஆகிறது. ஒரு கட்டு ரூ.10 என வாங்கிச் செல்லும் வியாபாரிகள் இருபது ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். இந்த 400 கீரைக் கட்டுகளில் இருந்து தினசரி ரூ.4000 கிடைத்தாலும் கூட, அதில் ஒரு பகுதியை தினசரி வயல் வேலைகளுக்காக ஒதுக்கி விடும் முனுசாமி, எனக்கு பாதி, வயலுக்கு பாதி என்பதுதான் என்னுடைய வருமான முறை என்கிறார்.
The post 10 வகை கீரை சாகுபடி! appeared first on Dinakaran.