தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீடுகள்..!!

3 weeks ago 3

சென்னை: தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23 (விரைவுமதிப்பீடு)மற்றும் 2023-24 (முன்மதிப்பீடு) ஆம் ஆண்டுகளுக்குப் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மதிப்பிட்டுள்ளது.

இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகத்தால் ஒப்பளிக்கப்பட்ட முறைகள் மற்றும் ஒப்பீட்டுத் தரவுகளைப் பின்பற்றி மதிப்பிட்டுள்ளது. இந்தத் தரவுகள் அனைத்து மாநிலங்களுடன் ஆண்டு வாரியாக ஒப்பிடத்தக்கவை ஆகும். இவ்வகையில் தமிழ்நாட்டின் சாதனைகளை முந்தைய ஆண்டுகளின் செயல்திறனுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய உதவுகின்றன.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் சிறப்புக்கூறுகள் பின்வருமாறு:

1. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் (விரைவுமதிப்பீடு) ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-24 ஆம் ஆண்டில் (முன்மதிப்பீடு) நிலையானவிலையில் ரூ. 15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.

2. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 8.13 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 8.23 சதவீதமாகவும் நிலையான விலையில் இருந்தது, அதே நேரத்தில் நடப்பு விலையில் வளர்ச்சி விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 15.48 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 13.71 சதவீதமாகவும் இருந்தது.

3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் நடப்பு விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 8.88 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.21 சதவீதமாகவும் இருந்தது. நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 9.03 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.04 சதவீதமாகவும் இருந்தது.

4. தமிழ்நாடு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 2022-23 ஆம் ஆண்டில் நடப்பு விலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளது. நிலையான விலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் உள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்குச் சில மாநிலங்களுக்கான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் வெளியிடப்படாததால் ஒப்பீட்டுத் தரவரிசைகளை மதிப்பிட இயலவில்லை.

5. அகில இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 6.99 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 8.15 சதவீதமாகவும் இருந்தது, அதே நேரத்தில் நடப்பு விலையில், வளர்ச்சி விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 14.21 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.60 சதவீதமாகவும் இருந்தது.

6. தமிழ்நாட்டின் பணவீக்க விகிதங்கள் 2022-23 ஆம் ஆண்டில் 5.97 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 5.37 சதவீதமாகவும் இருந்தன. இதே காலகட்டத்தில் அகில இந்தியப் பணவீக்க விகிதங்கள் 6.65 சதவீதமாகவும் மற்றும் 5.38 சதவீதமாகவும் இருந்தன.

7. தமிழ்நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதம் நிலையான விலையில் 2012-13 முதல் 2020-21 வரை 5.80 சதவீதமாக இருந்தது. 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான வளர்ச்சி விகிதங்கள் நிலையான விலையில் முறையே 7.89%, 8.13% மற்றும் 8.23% ஆக இருந்தன. இதன் விளைவாக 2012-13 முதல் 2020-21 வரையிலான முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து 2021-22 முதல் 2023-24 முடிய மூன்றாண்டுளில் அடைந்த சராசரி வளர்ச்சி விகிதம் 8.08 சதவீதமாக ஆக உள்ளது.

8. தமிழ்நாட்டின் தலா வருமானம் நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1,66,590 ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.1,79,732 ஆகவும் இருந்தது. இந்தியாவின் தலா வருமானம் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.99,404 ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.1,06,744 ஆகவும் இருந்தது. இவ்விரு ஆண்டுகளில், இந்தியாவின் தலா வருமானத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் தலா வருமானம் 1.68 மடங்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு விலையில், தமிழ்நாட்டின் தலா வருமானம் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.2,77,802 ஆகவும் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.3,15,220 ஆகவும் இருந்தது. அகில இந்தியத் தலா வருமானம் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1,69,496 ஆகவும் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.1,84,205 ஆகவும் இருந்தது. எனவே, தமிழ்நாட்டின் தலா வருமானம் 2023-24 ஆம் ஆண்டில் தேசியத் தலா வருமானத்தை விட 1.71 மடங்காக இருந்தது.

9. தமிழ்நாட்டில் முதன்மைத் துறையின் மொத்த மதிப்புக் கூடுதல், நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1,50,230 கோடியாகவும், 2023-24ஆம் ஆண்டில் ரூ.1,56,058 கோடியாகவும் இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த மதிப்புக் கூடுதலில் முதன்மைத் துறையின் பங்களிப்பு 2022-23ல் 11.61 சதவீதமாகவும், 2023-24 ல் 11.18 சதவீதமாகவும் இருந்தது.

10. கால்நடைத் துறை, முதன்மைத் துறையின் மொத்த மதிப்புக் கூடுதலுக்கு நிலையான விலையில் அளித்த பங்களிப்பு 2022-23 ஆம் ஆண்டில் 48.99 சதவீதமாகவும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 49.03 சதவீதமாகவும் இருந்தது.

11. மொத்த மதிப்புக் கூடுதலில் இரண்டாம் நிலைத் துறையின் பங்களிப்பு நிலையான விலையில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.4,83,328 கோடியாகவும் மற்றும் ரூ.5,18,619 கோடியாகவும் இருந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் மாநில மொத்த மதிப்புக் கூடுதலில் இரண்டாம் நிலைத்துறையின் பங்களிப்பு முறையே 37.36 சதவீதமாகவும், 37.15 சதவீதமாகவும் இருந்தது.

12. உற்பத்தித் துறை, இரண்டாம் நிலைத் துறைக்கு 65 சதவீதம் பங்களித்து 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியைக் கண்டது. உற்பத்தித் துறை, மாநிலமொத்த மதிப்புக் கூடுதலுக்கு அளித்த பங்களிப்பு 2022-23 ஆண்டில் 24.44 சதவீதமாகவும், 2023-24 ஆம்ஆண்டில் 24.10 சதவீதமாகவும் இருந்தது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு, நிலையான விலையில், முறையே 9.29 சதவீதம் மற்றும் 6.37 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

13. தமிழ்நாட்டில் பணித் துறையின் மொத்த மதிப்புக் கூடுதல், நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.6,60,230 கோடியும், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.7,21,309 கோடியும் ஆகும். இந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையானது 45.47 சதவீதமும், 45.90 சதவீதமும் பங்களித்தது. 2023-24 ஆம் ஆண்டில் பணித் துறை நிலையான விலையில் 9.25% வளர்ச்சியடைந்துள்ளது. போக்குவரத்து, சேமிப்புகிடங்கு மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் 8.76%, பிறவகை போக்குவரத்துத்துறையில் 7.46%, நிதித் தொடர்பான பணிகளில் 9.29%, கட்டடமனை துறையில் 10.08%, பிறவகைப் பணிகளில் 9.96% என வளர்ச்சிக் காணப்பட்டது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பணித்துறை குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீடுகள்..!! appeared first on Dinakaran.

Read Entire Article