
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
'மும்மொழிக் கொள்கை' உட்பட, தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் எந்தவொரு மாநிலத்தையும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்த கோர்ட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மாநில அரசு புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தேசியக் கல்விக் கொள்கை வழியாக மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதில் எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது என்ற நிலைப்பாட்டையும் தெளிவாக விளக்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சார்பில் வரவேற்கிறோம்.
மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தத் தீர்மானம், அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கைதான் என்பதை எங்கள் கழகப் பொதுக்குழு திட்டவட்டமாக அறிவித்தது.
முற்போக்குச் சிந்தனைகள் மற்றும் தொலைநோக்கு இலக்குகளுடன் செயல்படும் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முடியாது. இருமொழிக் கொள்கை வெற்றிப் பாதையை அமைத்திருப்பதால் தமிழகத்தில் மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்று உலகின் பல பகுதிகளில் புகழ்பெற்று மிளிர்ந்து வருகிறார்கள்.
இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு அடைந்திருக்கும் முன்னேற்றங்களை, பல மாநில அரசுகள் பாராட்டி வருகின்றன. இந்நிலையில்,சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய முடிவு, மத்திய அரசுக்குப் பாடமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனியும் வேற்று மொழிகளை மாநில அரசுகள் மீது கட்டாயமாகத் திணிக்க முடியாது. தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் கனவு, தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது.
எனவே, தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை என்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் அரசியல் உள்நோக்கத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசுகள் தெரிவித்து வரும் ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு முயல வேண்டும். இதைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் வழிகாட்டுதலின் பேரில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.