தமிழ்நாடு விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர் சேர்க்கை: மே 5 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

2 weeks ago 3

மதுரை, ஏப். 23: தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் மதுரைப்பிரிவு மூலமாக 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர, இணையதளத்தில் மே 5ம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரைப்பிரிவு மூலமாக 7, 8, 9, மற்றும் 11ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர் விளையாட்டுத்துறையில் சாதனை புரிவதற்காக பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதுரையில் 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவியர் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இதன்படி மாணவர்களுக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மே 7ம் தேதி காலை 7 மணிக்கும் மாணவிகளுக்கு மே 8ம் தேதி காலை 7 மணிக்கும் துவங்குகிறது.

இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி மற்றும் கையுந்து பந்து விளையாட்டுகள் நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டி தேர்வு மாணவர்களுக்கு மட்டும் நடைபெறும். இத்தேர்வில் பங்கேற்க பிறப்புச்சான்றிதழ், ஆதார் அட்டை, பள்ளியில் பயில்வதற்கான வணம் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவில் தேர்வானோர் மாநில தேர்வுக்கு தகுதி பெறுவர். இதுகுறித்த தகவல்கள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் வெளியாகும். மேலும் மாணவ, மாணவிகளுக்கு வாள் விளையாட்டு, ஜூடோ குத்துச்சண்டை, ஸ்குவாஷ் ஆகிய மாநில அளவிலான தேர்வு போட்டிகள் சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் மே 12ம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. பளு தூக்குதல், வூஷூ போன்ற மாணவர்களுக்கு மட்டுமான தேர்வு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கிலும், இருபாலருக்குமான நீச்சல் சென்னை வேளச்சேரியில் உள்ள ஏஜிபி காம்ப்ளக்சிலும், இருபாலருக்குமான கைப்பந்து போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கிலும் மே 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இதற்கிடையே மே12 ம் தேதி மல்யுத்தம்(ஆண்கள்), டேக்வாண்டோ(இருபாலரும்) கடலூர் மாவட்ட விளையாட்டரங்கிலும், மல்லர்கம்பம்(ஆண்கள்) விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கிலும் நடைபெறும். விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பப்படிவம் இணையதளத்தில் நேற்று முதல் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை மே 5ம் தேதி மாலை 5 மணிக்குள் நிரப்பி மாணவ, மாணவிகள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர் சேர்க்கை: மே 5 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article