சென்னை: தமிழ்நாடு முதல்வரின் புத்தாய்வு திட்டம் மூலம் மாதம் ரூ.2 லட்சம் வரை ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்த 19 இளம் வல்லுநர்களுக்கு “பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மையில்” முதுகலை சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு பெல்லோஷிப் திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு 2 கட்டத்தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மூலம், பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அரசின் பல்வேறு துறைகளில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் ஒருங்கிணைப்பில், செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ெபலோஷிப்-இல் இணைந்தவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளாக மாதம் ரூ.65 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் இதர செலவினங்களுக்காக மாதம் ரூ.10 ஆயிரம் அரசு வழங்கியது. இந்த சிறப்புக்குரிய திட்டத்தில் இணைந்து பணியாற்றும்போதே, சிலருக்கு ஒன்றிய அரசுப் பணி, மாநில அரசுப் பணி போன்ற பணி வாய்ப்புகள் கிடைத்தன. மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்துடன் கூட சிலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலமாக முதுகலை சான்றிதழ் முடித்து வெளியேறும் மாணவர்களின் திறமையும், அறிவும் இந்த சமூகத்துக்கு பயன்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* ‘தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை’
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த சான்றிதழ் வழங்கும் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் ‘புகழ் மணக்க’ என்பதை ‘திகழ் மணக்க’ என்று பாடியதால் மறுபடி பாடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து நிருபர்களிடம் பேசுகையில் விளக்கமளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இக்கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை, மைக் சரியாக இல்லாத காரணத்தால் பாடுபவர்களின் குரல் கேட்கவில்லை; இதன் காரணமாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தேசிய கீதமும் முறையாக பாடப்பட்டது’’ என்றார்.
The post தமிழ்நாடு முதல்வரின் புத்தாய்வு திட்டம் மூலம் மாதம் ரூ.2 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.