தமிழ்நாடு மலையேற்ற திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

3 months ago 16

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.102024) தலைமச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற' திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக www.trektamailnadu.com என்ற பிரத்யேக வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த தமிழ்நாடு மலையேற்ற திட்டம்' வடிவமைக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களை இத்திட்டத்தில் அதிக அளவில் ஈடுபடுத்தும் இம்முயற்சி மாநிலத்தில் சூழல் சுற்றுலாவை வலுப்படுத்துவதற்கான ஒரு முன்னெடுப்பாகும். இவ்வாறு வாகன பயன்பாடு இல்லாத குறைந்த கார்பன் தடம் நிலைத்தன்மை கொண்ட சுற்றுலாவை ஊக்குவிப்பது, சூழல் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் பசுமைச் சூழல் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள உறுதித்தன்மையை காட்டுகிறது.

40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலைமேற்ற பாதைகளை பொதுமக்களுக்காக தமிழ்நாடு அரசு திறந்து வைத்துள்ளது. சுற்றுலாவில் நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டிகளுக்கு சீருடைகள் மலையேற்றக் காலணிகள், முதுகுப்பை, தொப்பி அடிப்படை, முதலுதவிப் பெட்டி, தண்ணீர் குடுவை, வெநீர் குடுவை, மலையேற்றக் கோல், தகவல் தொடர்பு சாதனங்கள், விசில் மற்றும் திசைக்காட்டி ஆகியவை அடங்கிய மலையேற்ற கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்குக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள மக்கள் நிலையான வருமானம் ஈட்டவும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்த முன்னெடுப்பு உதவும்.

பொது மக்களுக்கு முன்பதிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள [www.trektamilnadu.com) பிரத்யேக முன்பதிவு வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் தங்கள் முன்பதிவினை எளிதாக செய்ய உதவும் புகைப்படம், காணொளிக்காட்சிகள், 30 அனிமேஷன் மலைமேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் இவ்வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் 100% இணைய வழி பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர், பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article