தமிழ்நாடு, பெங்களூரு என 28 இடங்களில் நடந்தது எடப்பாடி உறவினர் ஈரோடு ராமலிங்கம் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு

2 hours ago 2

சென்னை: வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோடு ராமலிங்கத்திற்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள் என 28 இடங்களில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த சோதனை முடிவடைந்தது. இந்த சோதனையில் கடந்த 5 ஆண்டுகளில் ராமலிங்கம் தனது நிறுவனங்கள் மூலம் ரூ.750 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது வீடு, அலுவலகங்களில் இருந்து கட்டுக்கட்டாக கணக்கில் வராத ரூ.10 கோடி ரொக்கம், பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தை தலைமையிடமாக என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்மான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொழிலதிபரான என்.ராமலிங்கத்திற்கு சொந்தமானது. என். ராமலிங்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினராவார். என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்திற்கு இயக்குநர்களாக என்.ராமலிங்கத்தின் மகன்களான சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனத்திற்கு சென்னை உட்பட மாநில முழுவதும் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என வெளிமாநிலங்களிலும் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவது மற்றும் பெரிய அளவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டில் தனது வருமானத்தை பெரிய அளவில் குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக 23ம் நிதியாண்டை விட குறைத்து 24ம் நிதியாண்டில் கணக்கு காட்டியது தான் அந்த குற்றச்சாட்டு. ஆனால் 2023-24ம் நிதியாண்டில் பல கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனம் கட்டுமான பணிகள் மூலம் வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 7ம் தேதி முதல் ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தில் உள்ள என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அதன் கிளை நிறுவனங்கள், என்.ராமலிங்கம் வீடு, மகன்கள் வீடுகள், சென்னை, கோவை மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட மொத்தம் 28 இடங்களில் இந்த சோதனை இரவு பகலாக கடந்த 5 நாட்கள் நடந்து வந்தது.இந்த சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள், ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் ஈடுபட்டனர். அப்போது கடந்த 5 ஆண்டுகளாக வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், நிறுவனத்தின் ஆண்டு வருவாய், நிகர லாபம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

மேலும், ராமலிங்கத்தின் வீடு மற்றும் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ள சூரியகாந்த் மற்றும் சந்திரகாந்த் ஆகியோர் அலுவலகத்தில் இருந்து, இரண்டு விதமான கணக்கு விபரங்களை பராமரித்து வந்ததற்கான கணினி, லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கான ஆவணங்கள், பங்கு முதலீட்டு பத்திரங்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரொக்க பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அந்த ஆவணங்களை வைத்து நேரடியாக ராமலிங்கம் மற்றும் அவரது 2 மகன்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவாய் விபரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அதனை தொடர்ந்து சோதனையின் இடையே கைப்பற்றிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்தனர். அதில் ஈரோடு ராமலிங்கம் தனது நிறுவனங்கள் மூலம் வாங்காத சிமென்ட், கம்பிகள் போன்ற கட்டுமான பொருட்களை அவரது நிறுவனத்திற்கு வாங்கியதாக, சிமென்ட், கம்பிகள் சப்ளைசெய்த நிறுவனங்கள் பெயரில் வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் ஈரோடு ராமலிங்கம் மற்றும் அவரது மகன்களான சூரியகாந்த் மற்றும் சந்திரகாந்த் ஆகியோர் பல போலி கணக்குகள் மூலம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.750 கோடி வரை வரிஏய்ப்பு செய்தது ஆவணகள் மூலம் உறுதியானது. அதோடு இல்லாமல் ஈரோடு ராமலிங்கம் மற்றும் அவரது நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.10 கோடி ரொக்கம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ராமலிங்கம் கடந்த 5 ஆண்டுகளில் தனது மகன்கள், மருமகள்கள் பெயர்களில் குவித்து வைத்துள்ள சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post தமிழ்நாடு, பெங்களூரு என 28 இடங்களில் நடந்தது எடப்பாடி உறவினர் ஈரோடு ராமலிங்கம் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article