சென்னை: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தில் சேர்ந்து பயன் பெற தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் டான்சீட் திட்டமானது, தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக தொடங்கப்பட்டு இதுவரை 6 பதிப்புகள் நடைபெற்றுள்ளன. தற்போது 7ம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டான்சீட் திட்டம் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழியாக பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஓராண்டு கால தொழில் வளர் பயிற்சி, தொழில்முனைவு வழிகாட்டுதல்கள், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க முன்னுரிமை ஆகிய ஆதரவுகளும் வழங்கப்படும்.
இதன்மூலம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது 3 சதவீத பங்குகளை உதவி பெறும் புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும். புத்தாக்க சிந்தனையுடன் செயல்படக்கூடிய, வருங்காலங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் மாதிரிகளை கொண்ட, சமூகத்தில் நல்ல மாற்றங்களை விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், ஒன்றிய அரசின் டி.பி.ஐ.ஐ.டி தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பும் புத்தொழில் நிறுவனங்கள் www.startuptn.in இணையதளத்தின் வழியே, ஜனவரி 15ஆம் தேதி, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள விரும்பினாலும், ஏதேனும் வினாக்கள் இருந்தாலும் [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.