சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சரின் சீரிய தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமானது, நகர்ப்புற ஏழைகளிடையே சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி அவர்களின் வறுமையையும், நலிவு நிலையையும் குறைத்து, சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்து, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதும், நிலைத்த தன்மை அடையச் செய்வதும் ஆகும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் குறைந்த பட்சம் 10-20 சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து பகுதி மற்றும் வார்டு அளவில் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஏழை எளிய மக்களின் அமைப்பாக நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் ஒவ்வொரு பகுதி அளவிலான கூட்டமைப்பும் முறையான வட்டி விகித்தில் உடனடியாக கடன் பெற வழிவகை செய்தல், சுய உதவிக் குழுக்களின் பொருளாதார நடவடிக்கைகளை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளின் சுய உதவிக் குழுக்களுக்கு வழிகாட்டியாக உள்ளதுடன், கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள குழுக்களுக்கு பல்வேறு அரசு திட்டங்களின் பயன்கள் மற்றும் மானிய உதவிகளை பெறவும் வழிகாட்டுகிறது.
01.05.2021 முதல் 30.10.2024 வரை 2,538 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 6 மாதங்கள் சிறப்பாக செயல்பட்ட, பதிவு பெற்ற வெற்றிகரமாக மதிப்பீடு செய்யப்பட்ட அனைத்து பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கும் சுழல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சுழல் நிதியானது தேவையின் அடிப்படையில் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குக் கடனாக வழங்கப்படும். இதுவரை 1,415 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.7.07 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைந்துள்ள குழுக்களின் கடன் தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு பகுதி அளவிலான கூட்டமைப்பின் மூலம் வங்கியில் 317 திட்ட முன்வரைவுகள் சமர்பிக்கப்பட்டு இதுவரை 277.97 கோடி ரூபாய் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் 3,145 சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, 1,929 பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1,11,979 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தான உணவை சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் உறுதி செய்கிறார்கள்.
சிறு, குறு உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தின் மூலம் பகுதி அளவிலான கூட்டமைப்பை சார்ந்த 7,019 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.27.08 கோடி ரூபாய் மூலதன ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் தொழிலினை வலுப்படுத்தி கூடுதல் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு அரசு திட்டங்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெற்று சமூக மற்றும் பொருளாதார அளவில் மேம்பாடு அடைந்து வருகின்றனர்.
The post தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் பகுதி அளவிலான கூட்டமைப்புகளின் வெற்றிகரமான செயல்பாடுகள் appeared first on Dinakaran.