தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் வழங்கப்படும் பி.எட் சிறப்புக் கல்வி படிப்பிற்கு (B.Ed.Special Education) 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவுசார் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகள், செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவற்றில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வுத் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் கீழ் பி.எட் சிறப்புக் கல்வி கல்வியியல் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் மறுவாழ்வு கவுன்சில் அனுமதியும், உயர்கல்வித் துறையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கணினி அறிவியல், வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. பி.எட் சிறப்புக் கல்விக்கான கால அளவு: பி.எட் சிறப்புக் கல்வி படிப்பு 4 செமஸ்டர்கள் கொண்டு 2 வருடங்கள் படிப்பு மற்றும் 5 செமஸ்டர்கள் கொண்டு 2.5 வருடங்கள் படிப்பு வழங்கப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படும்.
தேவையான கல்வித் தகுதி: பி.எட் சிறப்புக் கல்வி படிப்பில் சேர அந்தந்த துறை சார்ந்த பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்திருக்க வேண்டும். வணிகம் மற்றும் பொருளாதாரம் பாடங்களுக்கு முதுகலைப் பட்டம் அவசியம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வு மற்றும் கட்டணம்: இந்த படிப்பிற்கு தகுதியானவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 500 சீட்கள் இந்த படிப்பில் வழங்கப்படுகிறது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குக் கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெறும். கலந்தாய்வில் சான்றிதழ்கள் சரிப்பார்ப்பு நடைபெறும்.
பி.எட் சிறப்புக் கல்வி படிப்பில் சேர பதிவுக் கட்டணம் ரூ.5,550, கல்விக்கட்டணம் ரூ.20,000 மற்றும் இதர கட்டணம் ரூ.10,000 என மொத்த கல்வி ஆண்டிற்கும் சேர்த்து ரூ.35,550 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் < https://tnouportal.in > என்ற இணையதளத்தில் மட்டும் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.12.2024
நுழைவுத்தேர்விற்குத் தகுதியானவர்கள் பட்டியல் வெளியாகும் நாள்: 9.12.2024
நுழைவுத்தேர்வு தேதி: 15.12.2024
நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: 23.12.2024
பி.எட் சிறப்பு கல்வி, பிஎட் (பொது) படிப்புக்கு இணையானது எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால், டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதத் தகுதியுள்ளது.
The post தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலையில் பி.எட் சிறப்புக் கல்வி மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.