சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், டாஸ்மாக் முறைகேடு குறித்த விசாரணை, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை, மீனவர்கள் போராட்டத்திற்கு தீர்வு காணுதல், இலங்கை தமிழர் பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும். கூட்டணி அமைப்பு, கட்சியை வழிநடத்துவது தொடர்பாக தலைவருக்கு முழு அதிகாரம் வழங்குதல் ஆகிய 17 தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பின்னர் விஜய் பேசியதாவது: தவெக தொண்டர்களுக்கு, மாநாட்டில் நான் ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூறினேன். அதையேதான் நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். இந்த மண் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண்.
சமய நல்லிணக்கத்தைப் பேணும் சமூகநீதிக்கான மண். இதை நாம் பாதுகாத்தே தீர வேண்டும். தவெக தொண்டர்கள் தினமும் மக்களைச் சென்று பாருங்கள், அவர்களுடன் பேசுங்கள். ஒவ்வொரு தெரு, வீட்டுக்குச் சென்று அவர்களின் பிரச்னை என்னவென்று கேளுங்கள், அதை தீர்ப்பதற்கு என்ன வழியென்று யோசியுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு நம் மீது ஒரு நம்பிக்கை பிறக்கும். அப்படி ஒரு ஆழமான நம்பிக்கையை விதைத்துவிட்டு, அதற்குபிறகு நிமிர்ந்து பாருங்கள்.
மோடிஜிக்கு தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே அலர்ஜி? தமிழகத்தில் வரும் ஜிஎஸ்டி-யை சரியாக வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் தமிழகத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யமாட்டேன் என்கிறீர்கள். தமிழக குழந்தைகளின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கிறீர்கள். ஆனால் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கிறீர்கள். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளிலும் கை வைக்கப் பார்க்கிறீர்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்கள் தொடங்கும்போதே உங்கள் திட்டம் என்னவென்று புரிந்துவிட்டது பிரதமர் சார். உங்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது, தமிழகத்தைக் கொஞ்சம் கவனமாக கையாளுங்கள். காரணம், தமிழகம் பல பேருக்கு தண்ணி காட்டிய மாநிலம். பார்த்துக் கொள்ளுங்கள், பார்த்து செய்யுங்கள். 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழ்நாடு, தமிழர் என்றாலே மோடிஜிக்கு அலர்ஜி ஜிஎஸ்டியை வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டை வஞ்சிப்பதா? தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் ஒன்றிய அரசு மீது விஜய் தாக்கு appeared first on Dinakaran.