சென்னை: தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு 3 நாட்கள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. இந்த சுற்றுலா, சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் ராமேஸ்வரம் சென்று திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் சிறப்பு தரிசனம் செய்யலாம். ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை, மங்களநாதர் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோயிலுக்கும் சிறப்பு தரிசனத்துக்கு அழைத்து செல்லப்படுவர். மேலும் தனுஷ்கோடியினை சிறப்பாக பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதிகளில் தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படும்.
முன்பதிவு செய்ய விரும்புவோர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com என்ற இணையதளத்திலும் அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்படும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு டோல் ப்ரீ எண்-180042531111, 044-25333333, 044-25333444 மற்றும் வாட்ஸ்அப் எண் 7550063121 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஏற்பாட்டில் திருச்செந்தூர், ராமேஸ்வரத்துக்கு 3 நாள் ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல் appeared first on Dinakaran.