சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வினா – விடை நேரத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் எம்.இராஜமுத்து ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன்: பேரவைத் தலைவர் அவர்களே, திண்டிவனம் தொகுதி, ஒலக்கூர் ஒன்றியம், அண்டப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயிலில் ஒருகால பூஜை நடத்த அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர் சேகர்பாபு: பேரவை தலைவர் அவர்களே, மகாபாரத பஞ்சபாண்டவர்கள் ஒருவரான அர்ஜுனன் பெயரை தாங்கி இருக்கின்ற சட்டப்பேரவை உறுப்பினர் அர்ஜுனன் அவர்கள் திரௌபதி அம்மனுக்கு வேண்டுகோளை வைத்திருக்கின்றார். துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில் என்றாலும் அவர் வேண்டுகோளை நிறைவேற்றுகின்ற வகையில் ஊர் மக்களிடம் கலந்து பேசி துறையின் கட்டுப்பாட்டில் அந்த திருக்கோயிலை கொண்டு வந்தால் நிச்சயம் ஒருகால பூஜை திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நித்திய பூஜைகள் நடைபெறுவதற்கு வழிவகை காணப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன்: பேரவை தலைவர் அவர்களே, என்னுடைய திண்டிவனம் தொகுதி மரக்காணத்தில் தமிழ் பேரரசு இராஜராஜ சோழனால் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்பே 12 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட பழமையான அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயிலுக்கு நான் சட்டப்பேரவையில் வைத்த கோரிக்கை அடிப்படையில் சமீபத்தில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றார்கள். ஆகையால் அக்கோயிலில் அன்னதானத் திட்டம் செயல்படுத்த அரசு முன் வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கூறிய அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் குறைவாக வருகின்ற காரணத்தினால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவு பெற்று இந்த ஆண்டு அன்னதானத் திட்டத்தில் அந்த திருக்கோயில் சேர்த்துக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன்: பேரவை தலைவர் அவர்களே, திண்டிவனத்தில் அமைந்துள்ள தண்டீஸ்வரர் கோயில் மற்றும் முன்னூர் ஊராட்சி, ஆடவல்லீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அப்பணிகள் தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பணிகள் எப்போது நிறைவு பெற்று குடமுழுக்கு நடைபெறும் என்பதை அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கூறிய அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் கோயில் என்பது சுமார் 1978 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற திருக்கோயில் ஆகும். தற்போது திராவிட மாடல் ஆட்சியில் இப்படி காலம் கடந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத திருக்கோயில்களை திருப்பணிக்கு எடுத்துக்கொள்ள முதல்வர் அவர்களின் உத்தரவிட்டதன் பேரில் அத்திருக்கோயிலில் 18 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. மேலும், அத்திருக்கோயிலுக்கு புதிய ஏழுநிலை கருங்கல் இராஜகோபுரம் 4.45 கோடி ரூபாய் செலவில் உபயதாரர் நிதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் 70 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. இந்த இரண்டு திருப்பணிகளும் வருகின்ற ஜீலை மாதத்திற்குள் நிறைவு பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை: பேரவை தலைவர் அவர்களே, கடந்த 2021 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் பட்டுக்கோட்டை தொகுதி தாமரங்கோட்டை ஊராட்சி அருள்மிகு கண்டேஸ்வரர் திருக்கோயில் இடத்தில் ஒரு திருமண மண்டபம் சுமார் 3.75 கோடி ரூபாய் கட்டி தருவதாக அமைச்சர் அவர்கள் உறுதி அளித்து அந்த திருக்கோயிலில் போதுமான நிதி இல்லாததால் திருச்சி மாவட்டம் சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் கோயிலிருந்து இரண்டரை கோடி ரூபாய் நிதி பெற்று மண்டபம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. மீதம் உள்ள ஒன்னேகால் கோடி ரூபாய் இதுவரை இந்த மண்டபத்திற்கு தரப்படவில்லை. எனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் சமயபுரம் திருக்கோயிலிலிருந்து மேற்படி மண்டபத்திற்கு தர வேண்டிய நிதியை பெற்று தருவாரா என தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு கண்டேஸ்வரர் திருக்கோயிலில் 3.75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்ற திருமண மண்டபத்தில் 70 சதவீத பணிகள் முடிவுற்றன. மீதம் இருக்கின்ற பணிகளுக்கு அங்கிருந்து ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு இருக்கின்றன. சமயபுரம் திருக்கோயிலில் அந்த பரிந்துரை ஏற்கப்பட்டு மீதமுள்ள நிதியை ஒதுக்கீடு செய்து இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த திருமண மண்டபம் கட்டுகின்ற பணி முழுமை பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் இராஜமுத்து: பேரவை தலைவர் அவர்களே, என்னுடைய வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில் பழமைவாய்ந்த திருக்கோயில். அதற்கு குடமுழுக்குக்காக வருட கணக்கில் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது எப்பொழுது முடிந்து குடமுழுக்கு நடைபெறும் என்பதை அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: பேரவை தலைவர் அவர்களே, உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில் ஆகும். அங்கு கருங்கல்லால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதர திருப்பணி என்றால் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து அந்த பணிகள் நிறைவு பெறும். கருங்கல் திருப்பணி என்பதால் அதற்கு தேவையான கற்களை கொண்டு வந்து, அதற்கான பணி செய்பவர்களை வைத்து பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த பணியை விரைந்து முடிக்க இணை ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு நான் நேரடியாக அத்திருக்கோயிலுக்கு சென்று ஆய்வு செய்து பணிகளை எவ்வளவு விரைப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவுபடுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்துவதற்கு உண்டான பணிகளை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
The post தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில்!! appeared first on Dinakaran.