தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைப்பு: அரசிதழில் வெளியீடு

1 week ago 3

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் செல்வக்குமார், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதன்பிறகு, ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், அவரின் நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், பல்கலைக்கழக வேந்தரின் பிரதிநிதியாக தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக கழகத்தின் துணைவேந்தரும், பல்லைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) உறுப்பினருமான சசிகலா வஞ்சாரி, அரசு பிரதிநிதியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிசிச்சையியல் இயக்குனரகத்தின் முன்னாள் இயக்குனர் தனபாலன், பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக பேராசிரியர் ராபின்சன் ஜெ.ஜெ.ஆபிரகாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தேடுதல் குழு அமைப்பதற்கான அரசாணை, தமிழ்நாடு அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. குழுவின் ஒருங்கிணைப்பாளராக, சசிகலா வஞ்சாரி செயல்படுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த தேடுதல் குழு, தகுதியான 3 பேரை தேர்வு செய்யும். இதில், ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

* யுஜிசி பிரதிநிதி இல்லை?
தமிழக அரசால் அமைக்கப்படும் துணைவேந்தர் தேடுதல் குழுவைப் போலே தற்போது கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவிலும் ஆளுநரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி என 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சசிகலா வாஞ்சாரி யுஜிசியின் உறுப்பினராகவும் உள்ளார். ஆனால் அவர் தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதியாக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் (இசை பல்கலைக்கழகம் நீங்கலாக) வேந்தருமான ஆர்.என்.ரவி புதிய துணைவேந்தர்களின் தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழகழகத்தின் பிரதிநிதி ஆகியோருடன் யுஜிசியின் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில்தான் தமிழக அரசுக்கும் வேந்தரான ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைப்பு: அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article