தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பங்குச்சந்தையில் ரூ.335 கோடி மோசடி: முக்கிய குற்றவாளிகள் துபாய்க்கு தப்பியோட்டம்

11 hours ago 4

புதுடெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பங்குச்சந்தையில் ரூ.335 கோடி மெகா மோசடி செய்த முக்கிய குற்றவாளிகள் துபாய்க்கு தப்பியோட்டம் பிடித்ததால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வந்த சர்வதேச சைபர் மோசடிக் கும்பல் ஒன்று, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் மாதம் 7 முதல் 11 சதவீதம் வரை லாபம் தருவதாக ஆசை காட்டி, நாடு முழுவதும் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ‘ஐவி டிரேட்’, ‘ஸ்கை குரோத் வெல்த் மேனேஜ்மென்ட்’ போன்ற போலி நிறுவனங்களை உருவாக்கி, மல்டி-லெவல் மார்க்கெட்டிங் பாணியில் செயல்பட்டு வந்துள்ளனர்.

புதிய முதலீட்டாளர்களைச் சேர்ப்பவர்களுக்கு பிரான்ஸ், சில்வர், கோல்டு எனப் பதவிகள் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இந்த வலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த 11,000க்கும் மேற்பட்டோர் சிக்கி, சுமார் ரூ.335 கோடியை (ரூ.235 கோடி வங்கிப் பரிவர்த்தனை, ரூ.100 கோடி இதர பரிவர்த்தனை) இழந்துள்ளனர். இந்த மெகா மோசடி குறித்து புகார்கள் குவிந்த நிலையில், சூரத் நகர சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

சூரத் மற்றும் ராஜ்கோட் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி, டேனிஷ், ஜெய்சுக் படோலியா, யஷ் படோலியா ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 லட்சம் ரூபாய் ரொக்கம், ஏராளமான மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியின் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர்கள் துபாய்க்கு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க சர்வதேச அளவில் தேடுதல் வேட்டையை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.

The post தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பங்குச்சந்தையில் ரூ.335 கோடி மோசடி: முக்கிய குற்றவாளிகள் துபாய்க்கு தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article