மதுராந்தகம்: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநர் ரவியை கண்டித்து காஞ்சிபுரத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது குறித்து எம்எல்ஏ சுந்தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று கூடியது. அதில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தும் தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும் அவரைக் காப்பாற்றும் அதிமுக – பாஜக கூட்டணியையும் கண்டித்து திமுக சார்பில் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய பாஜ அரசின் ஏஜென்ட் ஆக செயல்படும் ஆளுநரை காப்பாற்றவும் ஒன்றிய அரசின் மீது உள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசை மாற்றும் வகையில் அதிமுக- பாஜ கள்ளக்கூட்டணி வித்தைகளை காட்டிக் கொண்டிருக்கிறது.
அதிமுகவின் துரோகங்களை புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை தொடர்ந்து பத்து தேர்தல்களில் தோற்கடித்த பிறகும் தமிழ்நாட்டை காட்டிக் கொடுக்கும் அரசியலை எடப்பாடி பழனிசாமி செய்து வருகின்றார். திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என்றைக்குமே மாநில உரிமைகளையும் தமிழ்நாட்டு மக்களின் நலனையும் விட்டுக் கொடுக்காது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்காத தமிழ்நாட்டில் உரிமைகளை மதிக்காத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிக்காத ஆளுநர் ரவியை உடனடியாக ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழகத்தினர், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
The post தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநர் ரவியை கண்டித்து காஞ்சிபுரத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: எம்எல்ஏ சுந்தர் தகவல் appeared first on Dinakaran.