சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடும்போது, ‘‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’’ என்ற வரி விடுபட்டது என்பது மிகப் பெரிய தவறு. இதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
இது கவன குறைவு காரணமாக ஏற்பட்ட தவறு என்று சென்னை தூர்தர்ஷன் விளக்கம் அளித்திருக்கிறது. எனவே, இது தூர்தர்ஷன் நிர்வாகம் செய்த தவறு. இதனை, ஆளுநர் தான் செய்தார் என்று கற்பனை செய்து கொண்டு, அவரை வசைபாடுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்தக் குற்றச்சாட்டினை ஆளுநர் மறுத்துள்ளார். தூர்தர்ஷன் நிர்வாகத்தில் ஏற்பட்ட கவனச் சிதறல் என்று தூர்தர்ஷன் நிர்வாகமே ஒப்புக் கொண்டிருப்பதையும், ஆளுநர் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை மறுத்திருப்பதையும் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் பிரச்னைக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஓபிஎஸ் அறிக்கை appeared first on Dinakaran.