
சென்னை,
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29-ந் தேதி தொடங்கி மே 5-ந் தேதி (இன்று) வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்றும், இந்த விழாவில் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, கலைப்போட்டிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. அதன்படி, மாநிலம் முழுவதும் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் தமிழ் வார விழாவின் நிறைவு விழா இன்று (திங்கட்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகித்தனர்.
தமிழறிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய 41 நூல்களும், எழுத்தாளர் மெர்வின் எழுதிய 85-க்கும் மேற்பட்ட நூல்களும், எழுத்தாளர் பழநி எழுதிய 16 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறை மூலம் நாட்டுடைமை செய்யப்பட்டு அவர்களது மரபுரிமையர்களுக்கு ரூ.10 லட்சம் வீதமும், தமிழறிஞர் கோதண்டம் எழுதிய 125-க்கும் மேற்பட்ட நூல்களும், தமிழறிஞர் தமிழ்நாவன் எழுதிய 34 நூல்களும் நாட்டுடைமை செய்யப்பட்டு நூலுரிமைத்தொகையாக தலா ரூ.10 லட்சம் வீதமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.
மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.