
சென்னை,
சமீபத்தில் சேகர் கம்முலா இயக்கிய ''குபேரா'' படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''கூலி'' படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல், அவரது 100-வது பட அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், சசிகுமார் மற்றும் பிரீத்தி அஸ்ரானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ''அயோத்தி''படத்தின் ரீமேக்கில் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தின் கதையால் நாகார்ஜுனா ஈர்க்கப்பட்டதாகவும், அதை தெலுங்கு பார்வையாளர்களுக்கு கொண்டு செல்ல ஆர்வமாக இருப்பதாகவும் தெரிகிறது. ரீமேக் உரிமைகளுக்காக டிரைடென்ட் ஆர்ட்ஸுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.