
சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. 100 நாட்களை கடந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன் மற்றும் திரைபிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது, படக்குழுவினர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். பின்னர், "எனக்கு சரியாக சம்பளம் வந்துவிட்டது. அதுவே தமிழ் சினிமாவில் அரிது. எனக்கு இது ஆச்சரியமாக உள்ளது. ஏனென்றால் படம் வெளியாவதற்கு 6 மாதத்திற்கு முன்பே முழுசம்பளத்தையும் கொடுத்து, அதை தாண்டி மரியாதையும் தெளிவாக கொடுத்தார்கள். இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை பார்ப்பதே ரொம்ப அரிதான விஷயம்" என்று கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை பாராட்டி பேசினார்.