தமிழும் திருக்குறளும் எனது இரு கண்கள் – குறளரசி சீதளாதேவி!

2 hours ago 3

“திருக்குறளை தேசிய நூலாக, உலக நூலாக அறிவிக்க வேண்டும் இதனையே உலகோர் வாழ்வியல் வேதமாக போற்றச் செய்தல் வேண்டும்” என்கிறார் ஆன்மீகப் பேச்சாளர், சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், உலக சாதனையாளர் , மாவட்ட ,மாநில பயிற்றுநர் என பல்வேறு முகங்களை கொண்ட பள்ளி ஆசிரியர் சீதளாதேவி.முப்பத்தியேழு வயதேயான சீதளா தேவி அவர்கள் எம்.ஏ., பி.எட்., எம்.பில் (தமிழ் இலக்கியம்), பி.ஏ(ஆங்கிலம்) பி.ஏ(வரலாறு) மற்றும் மதிப்புறு முனைவர் பட்டங்கள்-3 என பெற்று சாதனை செய்துள்ளார். திருக்குறளின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அவருடைய எளிய ஆனால் உறுதியான கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இவர் பணிபுரிவது செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில். தமிழ் நூல்களை தரணிக்கு எளிமையாக எடுத்துச்சென்று தமிழரின் மொழியறிவையும் பண்பாட்டையும் அறிந்து வாழ்வியலை அமைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கம் உள்ளவர்தான் இந்த நல்லாசிரியர் சீதளாதேவி.

உங்கள் மொழியார்வம் குறித்துச் சொல்லுங்கள்?

வாரியார் மற்றும் திருவாவடுதுறை ஆதினம் மற்றும் சூரியனார் கோவில் ஆதினம், திருவண்ணாமலை ஆதினம் ஊட்டிய தமிழார்வம் என்னை பெரிதும் ஆக்கிரமிக்க துவங்கியது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணியை விருப்ப ஓய்வு செய்துவிட்டு இளைய தலைமுறையை வளர்க்கும் நோக்கில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டேன். இதுவரை பதினைந்து 15 உலக சாதனைகள் செய்துள்ளேன். என் ஆத்ம குருநாதரான திருமுக கிருபானந்த வாரியார் திருக்குறள் கதைகளை பல மேடைகளிலும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பொழுது தோன்றிய ஆர்வம் தமிழாசிரியரானதும் ஊக்கத்தைக் கொடுக்க உலக சாதனையின் மூலம் என் தீரா காதலை இந்த உலகிற்கு காட்டியது என்பதே உண்மை. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை தமிழக அரசு அறிவித்தவுடன் நன்றி அறிவித்து விழா நாளன்று நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை 25 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியது எனது திருக்குறள் மீதான ஆர்வத்திற்கு பெரும் சான்று.

திருக்குறளில் என்ன சாதனைகளை செய்துள்ளீர்கள்?

வெற்றிலை,மரக்கிளிப்,சாக்பீஸ், சோப், மண்பானை, புடவை, வாழை இலை, நார் தட்டு, இந்திய வரைபடம் சோழி ஆகிய 9 பொருட்களில் 1330 திருக்குறள் முழுவதையும் எழுதி சாதனை படைத்துள்ளேன். எனது சாதனைகள் அனைத்துமே திருக்குறளை முதன்மை படுத்தியவை தான். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தான் என்னுடைய பங்களிப்பு இருக்கும். அடுத்த சாதனைக்கான முயற்சிகளை தொடர்ந்து வருகிறேன்.

வெற்றிலையில் திருக்குறளா? இது குறித்து சொல்லுங்களேன்?

உலகப் பொதுமறை என அழைக்கப்படுகின்ற திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வெற்றியைத் தருகின்ற வெற்றிலையில் பொறித்து பல முயற்சிகளுக்கு பின்பு அதனை சாதித்து வெற்றி பெற்றேன். மொத்தம் 20 மணி நேரத்தில் நாற்பத்தி மூன்று வெற்றிலையில் திருக்குறள் 1330 குறளையும் எழுதி உலக சாதனை நிகழ்த்தினேன். இதற்காக சாதனைப் பெண்மணி மற்றும் மதிப்பு மிகு சாதனையாளர் எனப் பாராட்டப்பட்டேன்.

இதர உலக சாதனைகள் குறித்து…

அதே போன்று அரளி இலையில் தொல்காப்பியம் முழுவதும் எழுதியது தொல்காப்பியர் ஓவியத்திற்குள் தொல்காப்பியம் எழுதியது எனது சாதனைகளில் ஒன்று. இந்திய வரைபடத்தில் உலக அளவிலான மகளிர்களின் பெயர்களின் எழுதியது, திருவாசகம் சொற்பொழிவு செய்வது, திருவாசகம் குறித்து 48 மணி நேரம் இடைவிடாமல் சொற்பொழிவு செய்ததும் மகிழ்வான ஒன்றுதான். கலைஞரின் குறளோவியம் எனும் தலைப்பில் பன்னாட்டுப் பல்சுவை உலக சாதனை (136 1/2 மணி நேரம் இடைவிடாமல் ) செய்தேன். தாய்மொழி தினத்தை முன்னிட்டு தாய்மொழி தினம் என புடவை முழுவதும் எழுதி அதை உடுத்தி தாய்மொழி தினத்தன்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளேன்.
இப்படியான மொழி குறித்த பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளேன். ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனது சாதனைகளை உலக சாதனையாகப் பதிவு செய்துள்ளது என்பது எனக்கு கிடைத்த மாபெரும் கௌரவம்.

உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் விருதுகள் குறித்து..?

நான் எழுதிய சிறந்த விமர்சனங்களுக்காக சிறந்த பத்திரிகையாளர் என முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது.
மேலும் நான் ஆற்றிய மொழிப் பணிகளுக்காக திருவள்ளுவர் விருது, நல்லாசிரியர் விருது, சித்தாந்த ரத்தினம் விருது, திருமுறை மணி விருது, தேவாரமணி விருது, திருக்குறள் தூதர், உலக சாதனையாளர், குறள் ஞான தாரகை விருது உட்பட 500 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் குட்டி ஆண்டாள் விருது கிடைத்தது. பத்ம கமலஹாசனிடம் இன்றியமையா மொழியியல் வல்லுந‌ர் விருதும் பெற்றுள்ளேன்.

தமிழ்மொழிக்கு நீங்கள் செய்யும் தொண்டுகள் என்ன?

பள்ளியில் என்னிடம் பயிலும் மாணவர்களைத் தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் சிறு சிறு கவிதைகள் கட்டுரைகள் எழுதவும் பயிற்சியளித்து மாவட்ட மாநிலப் போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்து தமிழார்வத்தை அவர்களிடத்தில் ஊக்குவிக்கிறேன்.

வீடும் நாடும் செழித்திட…
உலகம் ஒன்றாய்
இணைந்திட…
அறம்,பொருள், இன்பம்
பெருகிட…

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் உயரிய பண்பாட்டை உலகம் உணர்ந்திட நம் அமுதத் தமிழ் மொழியை அனைவரும் கற்றிட வேண்டும். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று முழங்கிடல் வேண்டும். தாய்மொழிக் கல்வி வழியே சிறந்தது. தாய் தமிழே உலகில் நம்மை உயர்த்தும். திருக்குறள் மனனப் பயிற்சியும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிவருகிறேன். எனது இலக்கு மற்றும் கனவு என எல்லாமே தமிழின் அறத்தை பறைசாற்றும் விதத்தில் அமைந்த திருக்குறளை, தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதே. அதை நிறைவேற்றும் வரை எனது தமிழ் பணிகளும், திருக்குறள் சார்ந்த பணிகளும் , உலக சாதனைகளும் தொடர்ந்து வரும் என உறுதியாக பேசுகிறார் நல்லாசிரியர் மற்றும் குறளரசி சீதளாதேவி.
– தனுஜா ஜெயராமன்

 

The post தமிழும் திருக்குறளும் எனது இரு கண்கள் – குறளரசி சீதளாதேவி! appeared first on Dinakaran.

Read Entire Article