விருத்தாசலம்: தமிழுக்கு, சமூக நீதிக்கு, மாணவர்களுக்கு வேட்டு வைக்கும் கொள்கை புதிய கல்வி கொள்கை. ரூ.10000 கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் ஏற்க மாட்டோம். ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் திட்டங்கள் தொடரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களை கள ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வுக்காக 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் சென்றார். அன்று கடலூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.1476 கோடியிலான 602 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.387.66 கோடியில் 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து நெய்வேலியில் மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது. இதில் அப்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதன்பிறகு நெய்வேலி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய முதல்வர், நேற்று தனது 2வது நாள் சுற்றுப்பயணத்தை நெய்வேலியில் ரோடு ஷோவுடன் தொடங்கினார். நீண்டதூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மாணவர்கள், இளம்பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காரில் விருத்தாசலம் வழியாக 11.40 மணியளவில் வேப்பூர் சென்றார். வேப்பூர் அருகிலுள்ள திருப்பெயர் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி வளாகத்தில்தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை கொண்டாடும் விதமாக ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ என்கிற தலைப்பில் 7வது மண்டல மாநாடு, நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாநாட்டு அரங்கின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த காட்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் ரூ.177 கோடி மதிப்பீட்டில் அரசு பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் ஆய்வுக்கூடங்கள், உண்டு உறைவிட பள்ளி கட்டிடங்கள் ஆகியவற்றை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து 234/77 (ஒருமைக்கண்) செயலி மற்றும் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ‘அப்பா’ என்ற செயலியை தொடங்கி வைத்தும், மாநாட்டு மலரை வெளியிட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய அரசுக்கு கல்வி, மருத்துவம் இரு கண்கள். இந்த ஆண்டு மட்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,000 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.8,200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இருந்தே கல்வித் துறைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் வழங்கி வருகிறோம் என்பதை நீங்கள் தெளிவாக உணரலாம். அதனால்தான், தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2வது இடத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம் பள்ளிக் கல்வித் துறையால் கொண்டு வரப்படுகின்ற பல்வேறு திட்டங்கள்தான். இதையெல்லாம் சொல்வது யாரு? ஒன்றிய அரசின் அறிக்கைகள். ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை மனதார பாராட்டி இருக்கிறார்கள். ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை என்பது, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இது ஆபத்து. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் இல்லை. ஆனால், எந்த மொழியை திணிக்க நினைத்தாலும், அந்தத் திணிப்பை எப்போதும் நாங்கள் எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம். இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளிக் கூடங்களில் இருந்து விரட்டுகின்ற கொள்கை அது. பள்ளிக்கூடத்தை விட்டு துரத்துகின்ற கொள்கை அது. அதை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தியிருக்கிறோம். தொடர்ந்து உணர்த்துவோம்.
இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டால் தான் 2000 கோடி ரூபாய் கிடைக்கும், 10,000 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்திட மாட்டோம். 2,000 கோடி ரூபாய் பணத்துக்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்திட்டால், என்ன ஆகும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 2000 ஆண்டுக்கு பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமுதாயம் போய்விடும். அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்ய மாட்டான். ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் திட்டங்கள் தொடரும். உங்களுக்கு உறுதுணையாக உங்களில் ஒருவனாக நான் இருப்பேன். நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கும், இருக்கும், இருக்கும் என்று உறுதிகூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழுக்கு, சமூக நீதிக்கு, மாணவர்களுக்கு வேட்டு வைக்கும் கொள்கை ரூ.10,000 கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு appeared first on Dinakaran.