சென்னை: தமிழர்களின் ஒவ்வோர் உள்ளமும் வள்ளுவர் வாழும் இல்லம்தான்; முதலில் ஓவியம் படைக்கிறேன் ஜூலை 13ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு கவிஞர் வைரமுத்து உரை எழுதியுள்ளார். அந்த நூலுக்கு ‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த நூலை வருகிற 13ம் தேதி வெளியிட உள்ளார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
வள்ளுவர் மறை
வைரமுத்து உரை
விழாவை இன்றே
தொடங்கிவிட்டோம் என்று
சூழ்ந்து கொண்டார்கள்
கட்டடக் கலையாளர்
சங்கர் மாரிமுத்துவும்,
கவிதைப் பித்தர்
காவிரிச் சோழனும்
மலைக்குச் சூட்டும்
மாலை சுமத்தி
அன்பின் வன்முறையை
ஆரம்பித்துவிட்டார்கள்
உரையாசிரியனுக்கே
இத்துணை சிறப்பென்றால்
மூல ஆசிரியன் கிடைத்தால்
என்னென்ன செய்வீர்கள்
என்று சிரித்தேன்
இன்னொரு
வள்ளுவர் கோட்டம் கட்டி
அதையே
வள்ளுவர் இல்லமாய்
வழங்கியிருப்போம் என்றார்கள்
தமிழர்களின்
ஒவ்வோர் உள்ளமும்
வள்ளுவர் வாழும் இல்லம்தான்!
என்
தோளுக்குச் சூட்டிய மாலையை
உன் தாளுக்குச் சூட்டுகிறேன்
தமிழாசானே!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post தமிழர்களின் ஒவ்வோர் உள்ளமும் வள்ளுவர் வாழும் இல்லம்தான்; ஜூலை 13இல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன்: வைரமுத்து! appeared first on Dinakaran.