தமிழகம் முழுவதும் விளைச்சல் சரிந்ததால் தேங்காய் விலை வரலாறு காணாத உயர்வு

1 month ago 8

*தேக்கமடைந்த தென்னங்கன்றுகளை அழிக்கும் விவசாயிகள்

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளான போச்சம்பள்ளி, சந்தூர், அரசம்பட்டி, பாரூர், அகரம், பண்ணந்தூர், மருதேரி, மஞ்மேடு, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட நர்சரி கார்டன்கள் உள்ளன. இங்கு ஜம்பு, நாவல், காட்டுநெல்லி, வீரிய ஒட்டுரக புளியஞ்செடிகள், சப்போட்டா உள்ளிட்ட பல வகையான செடிகள் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மரக்கன்றுகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதியில் தென்னங்கன்றுகளும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக 150க்கும் மேற்பட்ட தென்னை நர்சரிகள் செயல்பட்டு வருகிறது. தென்னங்கன்றுகள் தரத்தை பொறுத்து ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும், போச்சம்பள்ளி தாலுகா பகுதிக்கு நேரடியாக வந்து தென்னங்கன்றுகளை வாங்கி லாரி, டெம்போக்களில் ஏற்றி செல்கின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு கோடி தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அரசம்பட்டி, புலியூர், பண்ணந்தூர், அகரம், மஞ்சமேடு, உள்ளிட்ட பகுதியில் தென்னை தரமாகவும், அதிக விளைச்சல் தரக்கூடியதாகவும் இருப்பதால், அனைத்து மாநிலம் மற்றும் மாவட்டங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நெட்டை ரக தென்னங்கன்றுகள் முழுக்க, முழுக்க கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களிடையே தென்னை சாகுபடி மீதான ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள நர்சரிகளில் விற்பனை சரிந்தது. வாங்குவதற்கு ஆளில்லாததால், நாள் பட்ட கன்றுகள் ஆள் உயரத்திற்கு வளர்ந்து, மரங்கள் பருவத்தை எட்டின. இந்த தென்னங்கன்றுகள் எதற்கும் பயன்படாது என்பதால், தற்போது தென்னங்கன்றுகளை விவசாயிகள் அடியோடு அழித்து வரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தென்னை ஆராய்ச்சியாளர் புலியூர் கென்னடி கூறுகையில், ‘போச்சம்பள்ளி, அரசம்பட்டி பகுதியில், 60ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் தென்னங்கன்றுகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், உற்பத்தி செய்த கன்றுகளை விற்பனை செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளது.

தென்னங்கன்றுகளை பொறுத்த வரை, 2 அடி முதல் 3அடி வரை உயரத்திற்குள் இருக்கும்போது, நடவு செய்வதற்காக வாங்கி செல்வது வழக்கம். தற்போது 7 அடி முதல் 10 அடி வரை வளர்ந்துள்ளதால், விற்பனை செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் பல லட்சம் தென்னங்கன்றுகளை அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.3 கோடி விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்,’ என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழகம் முழுவதும் தேங்காய் விளைச்சல் அதிகரித்தது. இதன் காரணமாக, மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரித்து, தேங்காய் விலை சரிந்தது. போதிய விலை கிடைக்காததால், பெரும்பாலான விவசாயிகள், தேங்காயை கொப்பரையாக்கி விற்பனை செய்தனர்.

ஆனால், தற்போது தேங்காய் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. மார்க்கெட்டுகளுக்கு வரத்து சரிந்துள்ளதால், தேங்காயின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் ரூ.7க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய், தற்போது ரூ.15 முதல் ரூ.17 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, போச்சம்பள்ளி தாலுகாவில், தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தற்போது தேங்காய்க்கு டிமாண்டாக உள்ளது.

The post தமிழகம் முழுவதும் விளைச்சல் சரிந்ததால் தேங்காய் விலை வரலாறு காணாத உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article