தமிழகம் முழுவதும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு: தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

3 weeks ago 13

சேலம்: தமிழகம் முழுவதும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமலும், எவ்வித விபத்து நிகழாமலும் பண்டிகையை கொண்டாட அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும், இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேசமயம், பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசடைகிறது. அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு காரணமாக, சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ளவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இதன் காரணமாக, ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது வெடி விபத்துக்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குறிப்பாக, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள தீயணைப்பு துறை வீரர்களை அழைத்து வந்து பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மேலும், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயை கட்டுப்படுத்தவும், முழுவதுமாக அணைக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

பள்ளி மாணவர்கள் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும், என மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தமிழகம் முழுவதும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு: தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article