சென்னை: தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்க வேண்டுமென மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் பரவும் குடற்புழு தொற்று எனும், ஒட்டுண்ணி குடல் புழு தொற்று என்பது முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் மற்றும் உடல் நலனில் இவை தீங்கு விளைவிக்கின்றன.
இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த நாட்களில் குடற்புழு நீக்கத்துக்காக உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்பெண்டசோல் மாத்திரை குழந்தைகள் மற்றும் பருவ வயதினருக்குத் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும், 20-30 வயதுள்ளவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்க வேண்டுமென பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதன் மூலம் 2.15 கோடி (ஆண் பெண் இருபாலருக்கும்) 1-19 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், 20-30 வயதுள்ள 54.67 லட்சம் மகளிருக்கும் என மொத்தம் 2.69 கோடி பேருக்கு வழங்க பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: இந்த குடற்புழு நீக்க மாத்திரை அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள் அங்கன்வாடிகளில் வழங்கப்படுகிறது.
மேலும் இளைஞர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரை மாநகராட்சி சுகாதாரத் துறை உதவி உடன் அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகிறது. போதுமான மாத்திரைகள் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று இந்த குடற்புழு நீக்க மாத்திரை அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* குடற்புழு நீக்கத்தின் நன்மைகள்
* ரத்தசோகை குறைந்து ஊட்டச்சத்து அதிகரிக்கும்.
* மன ஆரோக்கியம் கூடும்.
* சிறந்த உடல் வளர்ச்சி.
* கற்றல் திறனும் செயல்பாடுகளும் அதிகரித்தல்.
* பள்ளிக்கு செல்லும் அளவு அதிகரிப்பு.
The post தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.