தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கை முதல்-அமைச்சர் பெற்றுத்தருவார்: சபாநாயகர் அப்பாவு

5 days ago 5

நெல்லை,

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தற்போது நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களை கவர்னர் கிடப்பில் போட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நிறைவேற்றியுள்ளது. இது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலுக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்கு காரணம் தமிழகத்தில் சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறது.

உத்தரபிரதேசத்தில் சட்டத்திற்கு விரோதமான ஆட்சி நடக்கிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறியுள்ளார். அங்கு 10 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக நீதிமன்றமே கூறுகிறது. இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, ஜனநாயக நாட்டில் மக்களை ஒருங்கிணைப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் தான். ஆகவே மத்திய, மாநில அரசுகள், பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி வாழ்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு சென்று கவர்னரின் அதிகாரம் இதுதான் என உணர்த்தும் வகையில் 10 மசோதாக்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். அதேபோல் நீட் தேர்வு விவகாரத்திலும் முதல்-அமைச்சர் நல்ல முடிவை பெற்றுத் தருவார், தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கை பெற்றுத்தருவார். ஏற்கனவே ஜிப்மர் ஆஸ்பத்திரி, மகாத்மா காந்தி ஆஸ்பத்திரி போன்ற கல்லூரிகளுக்கு நீட் விலக்கு இருப்பது போல் தமிழகத்திற்கும் நல்லது நடக்கும். பாஜக மாநில தலைவராக நெல்லையை சேர்ந்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article