தமிழகத்தில் முதன்முறையாக திராவிட இலக்கியம், இதழியல் பட்டய படிப்பு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிமுகம்

15 hours ago 4

சேலம்: தமிழகத்தில் முதன்முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தில், திராவிட இலக்கியம், இதழியல் முதுகலை பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் 25க்கும் மேற்பட்ட துறைகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பல்கலைக்கழகத்தில் உள்ள முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மையம் சார்பில், திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் என்ற ஓராண்டுப் பகுதிநேர முதுநிலைப் பட்டயப் படிப்பு நடத்தப்படவுள்ளதாக, துணைவேந்தர் ஜெகநாதன் அறிவித்துள்ளார். இப்படிப்பிற்கு, 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் (பொ) சுப்பிரமணி கூறியதாவது: பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள, திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் பட்டய படிப்பிற்கு, இளநிலைத் தமிழிலக்கியம், இளநிலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுநிலைத் தமிழிலக்கியம், முதுநிலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றை தற்போது பயின்று கொண்டிருக்க வேண்டும். பாடத்திட்டமாக, முதற்பருவத்தில், திராவிட இயக்க வரலாறு, திராவிட இலக்கியம், திராவிட இதழியல், உலகத் தத்துவ மரபில் திராவிடவியல், திராவிடவியலும் சமூக வளர்ச்சியும் ஆகியவையும் இரண்டாம் பருவத்தில் திராவிட இலக்கிய அழகியல், திராவிட இதழ்களின் நடையியல், திராவிட கலை ஊடகங்கள், திராவிடத் தத்துவவியல், திராவிடவியல் ஆய்வுகள் ஆகியவையும் பயிற்றுவிக்கப்படும்.

மாணவர்கள் https://periyaruniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பித்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்களுடன், பதிவாளர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ சமர்ப்பிக்க வேண்டும். இணையத்தில் விண்ணப்பிக்க இம்மாதம் 31ம் தேதியும், விண்ணப்பங்கள் வந்து சேர ஜூன் 10ம் தேதியும் கடைசி நாளாகும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு இயக்குநர் (பொ) சுப்பிரமணி (94442 04387), கவுரவ விரிவுரையாளர் சிலம்பரசனை (80121 93831) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் முதன்முறையாக திராவிட இலக்கியம், இதழியல் பட்டய படிப்பு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் appeared first on Dinakaran.

Read Entire Article