தமிழகத்தில் மக்கள் ஆட்சிதான் நடக்கிறது சினிமா செய்திகளை பார்ப்பதில்லை: நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்

1 month ago 5

வேலூர்: ‘தமிழகத்தில் மக்கள் ஆட்சிதான் நடக்கிறது. சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை’ என்று நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வேலூர் மாவட்டத்தில் ரூ.75.95 கோடி மதிப்பிலான 17 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.14.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 36 திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 247 ஊராட்சிகளுக்கு 345 கலைஞர் விளையாட்டு உபகரணங்களின் தொகுப்புகளை வழங்கி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 4,844 பயனாளிகளுக்கு ரூ.128.92 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ‘தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி மகளிருக்கான, தாய்மார்களுக்கான ஆட்சி என்று அனைவரும் சொல்வார்கள்.

அந்தளவிற்கு மகளிர் நலன் காக்கும் திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதற்குத்தான், மகளிர் குழுக்களுக்கு கோடிக்கணக்கான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில், பொருளாதாரத்தில், அரசியல் பங்கெடுப்பில் வலிமைபடுத்துவதால் நீங்கள் அனைவரும் இந்த ஆட்சியின் பக்கம் என்றைக்கும் நிற்கிறீர்கள். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் பெற்றுள்ள இளைஞர்கள், நாளை இந்தியாவிலேயே சிறந்த விளையாட்டு வீரர்களாக வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் பளு தூக்கும் ஒலிம்பிக் அகாடமி அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

விழா முடிந்து வெளியே வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது குறித்தும், தமிழகத்தில் மன்னராட்சிதான் நடக்கிறது என விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியது குறித்தும் நிருபர்கள் கேட்டதற்கு, ‘மன்னிக்க வேண்டும். நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை. தமிழகத்தில் மக்களாட்சிதான் நடக்கிறது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் முதல்வராகி இருக்கிறோம். அந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஆதவ் அர்ஜூனா பேசியிருக்கிறார்’ என்று பதில் அளித்தார். திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், வரும் 13ம் தேதி மகாதீபம் அன்று திருவண்ணாமலை மலை ஏற அனுமதிப்பது குறித்து கேட்டதற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

The post தமிழகத்தில் மக்கள் ஆட்சிதான் நடக்கிறது சினிமா செய்திகளை பார்ப்பதில்லை: நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில் appeared first on Dinakaran.

Read Entire Article