சென்னை: தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அக்டோபர் 31 - தீபாவளி வரை மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது. நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் (அக்.29) நாளையும் (அக்.30), தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்.31-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.