புதுச்சேரி: புதுச்சேரியில் அகில இந்திய என்ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 7ம்தேதி நடைபெற்ற என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வேலூரை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை புதுச்சேரி வந்து, முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, என்ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
பின்னர் முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய என்ஆர். காங்கிரஸ் தொடங்கும்போது அடுத்து தமிழகத்திலும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது தமிழகத்திலும் அகில இந்திய என்ஆர்.காங்கிரஸ் வர வேண்டும் என நிறைய நண்பர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். நடிகர் விஜய் எனது நண்பர், வேண்டியவர். அதன் அடிப்படையில் எப்போதும் அவருடன் பேசுவது உண்டு. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது, கூட்டணி எப்படி ஏற்படுகிறதோ, அதற்கு தகுந்தார்போல் என்ஆர்.காங்கிரசும் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு தேர்தலை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி?: புதுச்சேரி முதல்வர் பேட்டி appeared first on Dinakaran.