தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கட்டிடம்-மனைப்பிரிவுகளுக்கு தனித்தனி அனுமதி கட்டணம்: ஊரக வளர்ச்சி துறை அறிவிப்பு

4 weeks ago 6

சென்னை: தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கும் கட்டணங்கள் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங்பேடி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில் 2,500 சதுரடி மனையில் 3800 சதுர அடி வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் உடனடியாக கட்டிட அனுமதி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன், கட்டிட அனுமதிக்கான கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இக்கட்டணத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துக்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை.

அதன்பின், கடந்த ஜூலை 18ம் தேதி முதல் சுயசான்று அடிப்படையிலான அனுமதியளிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பரிந்துரைத்த கட்டணத்தை ஏற்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அந்தவகையில், குடியிருப்பு கட்டிடத்தை பொறுத்தவரை, ஏற்கெனவே உள்ள வகைப்பாடு அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக கட்டிடங்களை பொறுத்தவரை சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.32, இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.30. சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.26, இதர ஊராட்சிகளில் சதுரஅடிக்கு ரூ. 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மருத்துவமனை, கல்வி நிறுவனம், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்களை பொறுத்தவரை சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.43. இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.40, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரஅடிக்கு ரூ.35, இதர ஊராட்சிகளில் சதுரஅடிக்கு ரூ.24 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே மனைப்பிரிவை பொறுத்தவரை, குடியிருப்பு மனைப்பிரிவாக இருந்தால், ஒரு மனைக்கான அனுமதிக் கட்டணம் ரூ.1000 மற்றும், சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுரஅடிக்கு ரூ. 4-5, இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.3-4, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூ.2-3ம், இதர ஊராட்சிகளில் சதுரஅடிக்கு ரூ.1-2 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தொழிற்சாலைக்கான மனையாக இருந்தால் ஒரு மனைக்கு ரூ.10 ஆயிரம் அனுமதி கட்டணமாக செலுத்த வேண்டும். சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.6-7ம், இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுரஅடிக்கு ரூ.4.50-6ம், சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரஅடிக்கு ரூ.3-4.50ம், இதர ஊராட்சிகளில் சதுரஅடிக்கு ரூ.1.30 முதல் 3 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஊராட்சி நிர்வாகங்கள், தீர்மானம் மூலம், இந்த கட்டணங்களுக்குள் தங்கள் ஊராட்சிகளில் கட்டணம் நிர்ணயிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கட்டிடம்-மனைப்பிரிவுகளுக்கு தனித்தனி அனுமதி கட்டணம்: ஊரக வளர்ச்சி துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article