டெல்லி: தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அந்த சங்கங்களை பொதுமக்கள் சேவை மையமாக மாற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு ஒன்றிய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதில்: கிராமப் புறங்களில் இயங்கும் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக நாட்டிலுள்ள 67,930 வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கி ஒருங்கிணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள பொதுவான மென்பொருள் மூலம் நடக்கும் இந்தப் பணிகள் முழுமை அடைந்தால், இந்த சங்கங்களின் செயல்திறன் பல மடங்கு அதிகரிக்கும். விரைவாக கடன் வழங்குதல், குறைந்த சேவைக் கட்டணம், பணம் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை போன்ற நன்மைகளை இதன்மூலம் பெற முடியும்.
வேளாண் கடன் சங்கங்கள், தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் பால் பண்ணை, மீன் பிடித்தல், பூக்கள் சாகுபடி, கிட்டங்கிகள் அமைப்பது, உணவு தானியங்கள், விதைகள் மற்றும் உரங்கள் கொள்முதல் போன்ற பொருளாதாரத்தை மையப்படுத்திய இருபத்தைந்துக்கும் அதிகமான செயல்பாடுகளை கையாளும் வகையில் சங்க விதிகள் திருத்தி அமைக்கப்படும்.
பிரதமரின் விவசாயத் தகவல் மற்றும் விவசாயப் பொருட்கள் மையத் திடத்தின்படி, விவசாயிகளுக்கு விதைகள், உரம், பூச்சிக்கொல்லி போன்ற பொருட்களை வழங்கும் மையமாகவும், பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ் கிராமப்புர மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் வழங்கும் மையங்களாகவும் இந்த வேளாண் சங்கங்கள் செயல்பட இருக்கின்றன.
அத்துடன், வங்கிப் பரிவர்த்தனை, ஆயுள் காப்பீடு, ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் செய்தல், சுகாதாரம் தொடர்பான சேவைகள், மின்சாரக் கட்டணம் செலுத்துவது போன்ற 300 க்கும் அதிகமான சேவைகளை வழங்கும் பொது சேவை மையமாக இந்த வேளாண் கடன் சங்கங்கள் செயல்படும். இதன் மூலமாக கிராமப்புற மக்கள் எளிதில் இந்த சேவைகளைப் பெற முடியும்.
நாட்டில் ஒட்டுமொத்தமாக 40,214 வேளாண் கடன் சங்கங்களும், தமிழகத்தில் 4,453 சங்கங்களும் இப்படி பொது சேவை வழங்கும் மையங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை வேளாண் கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை கணினிமயப்படுத்த இந்த நிதியாண்டில் இதுவரை 28.2 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு ஒதுகியுள்ளது. இவ்வாறு அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார்.
The post தமிழகத்தில் உள்ள 4,453 வேளாண் கடன் சங்கங்கள் பொதுசேவை மையங்களாகவும் செயல்படும்: டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதில் appeared first on Dinakaran.