இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் 2வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரதம்

3 hours ago 2

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும், கைதான மீனவர்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றங்கள் அபராதம் விதிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல்களை ஒன்றிய அரசு கண்டிக்காமல் தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை கொள்ளாத ஒன்றிய அரசைக் கண்டித்தும், இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த பிப்.24 முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். ரூ.பல கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம்

இதனிடையே, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை தொடங்கியது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த அனைத்து விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள், மீன்தொழில் சார்பு தொழிலாளர்கள் பலர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். மேலும், திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தேமுதிக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம், எஸ்டிபிஐ, இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் மீனவர்களின் போராட்டம் இரவில் காத்திருப்பு போராட்டமாக தொடர்ந்தது. மீனவர்கள் போராட்ட பந்தலிலேயே இரவு முழுவதும் இருந்தனர். இந்நிலையில் மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.

The post இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் 2வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Read Entire Article