* ரூ.9.24 கோடி மதிப்புள்ள 33,980 குவிண்டால் அரிசி, 18,898 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
சென்னை: தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி, மண்ணெண்ணெய் கடத்தியதாக கடந்த ஓராண்டில் 11,571 பேரை சிவில் சப்ளை சிஐடி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்ளுக்கு மண்ணெண்ணெய், பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் அரிசி உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரயில் மற்றும் வாகனங்கள் மூலம் கடத்தி நல்ல லாபம் சம்பாதித்து வருகிறனர். இதுபோன்ற மோசடிகளை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை (சிவில் சப்ளை சிஐடி) பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 1.1.2024 முதல் 31.12.2024ம் நாட்கள் வரையிலான ஓராண்டு காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் கடத்தியதாக மொத்தம் 11,085 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11,571 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 33,980 குவிண்டால் அரிசி, 18,898 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 1,984 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 9 கோடியே 24 லட்சத்து 88 ஆயிரத்து 667 ரூபாய் ஆகும்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, மினி வேன், கார் என மொத்தம் 2,012 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க 41 ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கடத்தல்களை தடுக்க தமிழக எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து வாகன சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கை இந்த ஆண்டும் தொடரும் என்று சிவில் சப்ளை சிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி மண்ணெண்ணெய் கடத்திய 11,571 பேர் கைது appeared first on Dinakaran.