சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தரமாக இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்களை மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018-ல் வழக்கு தொடர்ந்தார். இதில் சட்டக்கல்வி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.