தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை மற்றும் இதர துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் ஆங்காங்கே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில், சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் புகார், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் உள்ளிட்ட சம்பவங்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அரசியல் ரீதியாக விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றன.