தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வரைவு பட்டியல் வெளியீடு; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

1 month ago 6

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை: 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு, வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல் / மறுசீரமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 29ம் தேதி (திங்கள்) வெளியிடப்படும்.

இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை 29.10.2024 முதல் 28.11.2024 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் மேற்கொள்ளலாம். அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக நவம்பர் மாதம் 9ம் தேதி (சனி), 10ம் தேதி (ஞாயிறு) மற்றும் நவம்பர் 23ம் தேதி (சனி), 24ம் தேதி (ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 வெளியிடப்படும். 29.10.2024 முதல் 28.11.2024 வரை உள்ள காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர் தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்கலாம்.

அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை, அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கலாம். சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம். 01.01.2025, 01.04.2025, 01.07.2025 மற்றும் 01.10.2025 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வரைவு பட்டியல் வெளியீடு; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article